Dienstag, Mai 18, 2004

ஓடுகிற வண்டியோட... - மீளும் நினைவுகள்

ஈழநாதனின் பதிவிலிருந்து.


கொழும்பு போகும் சனம் ஒல்லித்தேங்காயுடன் பயணம் போனது என்று சொன்னேன்.ஒல்லித்தேங்காய் எதற்கு என்று சொல்லவில்லை.தேங்காயில் இடையிலேயே பழுதடைந்த தேங்காய்கள் அவற்றை மூடியுள்ள தும்புடன் நீரில் போட்டால் நன்கு மிதக்கக் கூடியவை.இப்படியான இரண்டு தேங்காய்களை கயிற்றால் பிணைத்து அவற்றை இடுப்பிலை கட்டி நீந்தப்பழகுறதுக்கு பயன்படுத்துவினம்.ஆமி வந்தவுடனை கடலுக்கை குதிச்சு நீந்தாட்டிலும் மிதக்கிறதுக்காவது பயன்படுமே என்று தான் இவற்றையும் கொண்டு போனவை.

தொடர்ந்த இழப்புகளாலை சனம் கிளாலிப் பாதையென்றாலே ஏதோ யமலோகம் போறமாதிரிப் பயப்படத் தொடங்கீட்டுது.கொழும்பு போற ஆக்களை வழியனுப்ப வாறவை.போறவையை ஏதோ பலிக்களத்துக்குப் போற ஆடுகள் மாதிரிப் பார்த்திச்சினம்.

கிளாலி Mapஇதாலை விடுதலைப்புலிகளுக்கும் பெரும் பிரச்சனையாகப் போச்சுது உவ்வளவு வீரம் காட்டிறியள் உதிலை வாற நேவிக்கு அடிக்கக் காணேலை என்று சனம் நேரடியாகக் கேட்கத் தொடங்கீட்டுது.இந்தப்பிரச்சனையை பாராளுமன்றத்திலை கொண்டு போச்சினம் இரண்டு எம்பிமார்.அதுக்கு அரசங்கம் சொன்ன பதில் ஆனையிறவுப்பாதையாலை ஏ 9 றோட்டாலை சனம் போக விடாமல் புலிகள் இயக்கம் தான் தடுத்து வைச்சிருக்கு,கிளாலிப் பிரதேசம் தடை செய்யப்பட்ட பிரதேசம் எண்டு எண்டு அவையள் போகாத ஊருக்கு வழி சொல்லிச்சினம்.இதுவும் புலிகளுக்கு பெருத்த பிரச்சனையாகப் போச்சுது தாங்கள் களத்திலை இறங்கினாத்தான் சரி என்ற முடிவுக்கு வந்திச்சினம்.அப்ப இவ்வளவு நாளும் புலிகள் பாதுக்காப்புப் குடுக்கேலையோ என்று கேட்பியள் சும்மா இரண்டு படகு அங்கையும் இங்கையும் ஓடித்திரியும் .நேவிட்டையோ அல்லது கெலியிலை வாற ஆமிட்டையிருந்தோ பாதுகாப்பு குடுக்கிற அளவுக்கு அவயிட்டை வசதி இருக்கேலை.இப்ப தவிர்க்க முடியாத கட்டம் வந்தவுடனை கடற்புலிகள் காவலுக்கு வந்திச்சினம்.



சனத்துக்கும் கொஞ்சம் நம்பிக்கை ஏனெண்டா வல்வெட்டித்துறை முல்லைத்தீவு பகுதியளிலை கொஞ்ச நாள்களுக்கு முதல்தான் நேவிக்கப்பல்கள் கடற்புலியளிட்டை அடிவாங்கியிருந்தவை அதாலை சனம் கடற்புலிகளை நம்பி கிளாலிப்பாதையை பயன்படுத்தத் தொடங்கியது.

நான் முதல் சொன்ன மாதிரி வலுக் கூடிய இயந்திரங்கள் பூட்டப்பட்டு ஒன்றோடை ஒண்டு கட்டப்பட்டு படகுகள் பயணம் போகத் தொடங்கிச்சுது.வழியடையாளம் ஓலைகள்.கடற்புலிகளின்ரை படகுகள் ரோந்து போகத் தொடங்கிச்சினம்.புலியளின்றை படகுகள் களத்திலை இறங்கின உடனை அதுவே ஆமிக்கும் வாய்ப்பாப் போச்சுது ஏனென்டா கடற்புலியளிட்டை இருக்கிற பெரிய படகுகள் ஆழம் குறைஞ்ச பகுதியிலை போக மாட்டுது ஆனால் நேவி வைச்சிருந்த வோட்டர் ஜெற் எண்டு சொல்லுற அதிவேகப்படகுகள் ஒரு அடி ஆழத்தண்ணிக்குள்ளையும் போகும்.இதாலை நிலமையைத் தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்தி காவலுக்கு வரும் கடற்புலியளை அழிக்கவும் போக்குவரத்து செய்யுற பொதுமக்களை சாட்டோடை சாட்டா கொன்று தள்ளவும் நேவி முயன்றுது.


கிளாலிப் பாதை இரண்டு பக்கமும் தங்கடை பலத்தை பரீட்சை செய்து பார்க்கிற களமா மாறிப் போச்சுது தினம் தினம் சண்டைதான்.இரவு 8 மணியளவிலை புலியளின்ரை படகுகள் உலாப்போகும் போய் நேவி தென்படவில்லை என்ற உடனை ஒரு தொகுதி பொதுமக்களின்ரை படகுகள் போகும்.இது பூநகரியிலையும் ஆனையிறவிலையும் இருக்கிற நேவியின்ரை ராடரிலை தெரிந்தவுடனை நேவிப்படகுகள் தயாராகும் சனத்தின்ரை படகுகள் கடல் மத்திக்கு வரும் வரை பார்த்திருந்து விட்டு நேவிப்படகுகள் பாய்ந்துவரும் பிறகென்ன கடற்புலியளின்ரை படகுகள் துரத்தும் இவர்கள் ஓட அவர்கள் கலைக்க அவர்கள் ஓட இவர்கள் கலைக்க கிளாலி அல்லோலகல்லோலப்படும்.சனம் உயிரைக் கையிலை பிடிச்சுக் கொண்டு பயணம் போகும்.இப்பிடி சண்டைக்கு இடையிலை அம்பிட்டு கொஞ்சப்பேர் செத்துப் போனார்கள்.சண்டையிலை தங்களுக்குத் தோவியெண்டா ஆனையிறவிலையிருந்தும் மண்டைதீவிலையிருந்தும் கிளாலிக்கு ஷெல் அடிப்பாங்கள் அதிலையும் கொஞ்சம் காயப்பட்டும் செத்தும் போனது.

இப்படியாக வெறுமனே போய் வாற பாதைக்குக் கூட தைழ்ச் சனம் நிறைய விலை குடுக்கவேண்டியிருந்தது.அக்கரையிலும் இக்கரையிலும் இருக்கிற உறவுகளை இணைக்கும் ஒரே வழியான கிளாலியே சிலவேளைகளில் உறவுகளை நிரந்தரமாகப் பிரித்துவிடும் இடமாகவும் மாறியது.அப்பா வியாபார நிமித்தம் அடிக்கடி கொழும்பு போவார் நான் மோட்டார் சைக்கிளில் ஏத்திக் கொண்டு போய் கிளாலியின் இக்கரையில் விடுவேன்.அப்போது ஊரடங்கு எதுவும் இல்லை அதாலை நடு இரவிலையும் திரும்பிப் போகலாம் நான் போகமாட்டன்.இப்படிப்பட்ட பாதையாளை அப்பாவை விட்டுவிட்டு எப்படி நான் மட்டும் நிம்மதியாக வீடு போக முடியும் வீட்டில் அழுது கொண்டிருக்கும் அம்மாவின் முகத்தை விடியும் வரை பார்த்துக் கொண்டிருப்பதைவிட கிளாலியின் இக்கரையில் இருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது நல்லதாகப் பட்டது.அதைவிட முக்கியமான ஒன்று அன்று இரவு எந்தவித அசம்பாவிதமும் நடக்கேலையெண்டா அப்பா நல்லபடி அக்கரை போய்ச்சேர்ந்திட்டார் என்று அர்த்தம் அந்த நல்ல சேதியை விடிந்தவுடனை ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லி அம்மாவின் முகத்திலை தோன்றும் நிம்மதியைப் பார்ப்பது என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

இந்த நேரத்திலை எனக்கு நிறைய கடற்புலி அண்ணாமார் பழக்கமாய்ச்சினம்.என்ன அண்ணாமார் என்று சொல்கிறேன் என்று பார்த்தீர்களா அப்போதுதான் எனக்கு 12 வயது 12 வயதில் எப்படி மோட்டார் சைக்கிள் ஓட்டலாம் என்றெல்லாம் கேட்கவேண்டாம் ஏனென்றால் நான் அதை 10 வயதிலை இருந்தே ஓட்டத் தொடங்கீட்டன் லைசென்ஸ் என்றெதுவும் யாழ்ப்பாணத்தில் தேவைப்படவில்லை.

தங்களுடைய வலுக்குறைந்த படகுகளுடனும் ஆயுதங்களுடனும் படையினரைச் சமாளிக்க முடியாது என்பது தெரிந்தபோது கடற்புலிகளால் களத்தில் இறக்கப்பட்டவர்களே கடற்கரும்புலிகள் என அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் பிரிவினர்.கரும்புலிகள் என அழைக்கப்படும் இயக்கத்தின் ஒரு படைப்பிரிவினர் கடற்புலிகளுடன் சேர்ந்து மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதில் இறங்கினர்.இவர்கள் வெடி மருந்து நிரப்பப்பட்ட சிறு படகுகளை ஓட்டியபடி கிளாலிக் கடற்பரப்பில் வலம்வந்தனர் இலங்கை இராணுவத்தின் கடற்படைக் கலங்கள் சண்டைக்கு வந்ததும் இவர்கள் தங்களது வெடிமருந்து நிரப்பப்பட்ட படகுகளைக் கொண்டுபோய் அவர்களது படகுகள் மீது மோதி வெடித்தனர்.இதனால் கிளாலிக் கடற்பரப்பில் கடற்படையினரின் நடமாட்டம் குறைந்தது.மக்களும் புலிகளும் வெடிமருந்து நிக்கப்பட்ட இப்படகுகளை "இடியன்கள்" என அழைத்தனர் பெயரைக் கேட்டாலே சிறீலங்கா நேவிக்கலங்கள் ஓடுமளவுக்கு பயங்கரம் நிறைந்தவை இந்த "இடியன்கள்".கிளாலியின்ரை இக்கரையிலை நிக்கிற சனம் நேவி பற்றிக் கதை வரும்போது இண்டைக்கு "இடியன்கள் "உலாவுது பயமில்லை அவங்கள் ஆமியை பார்த்துக் கொள்ளுவாங்கள் என்று கதைப்பதை கேட்டிருக்கிறேன்

வெளிநாடுகளில் வசிக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து அக்காலத்தில் இடம்பெயர்ந்த எவரும் தம்மைப் பாதுகாப்பாக வழியனுப்புவதற்கு தம்முயிரைக் கொடுத்த இந்த "இடியன்களை" மறந்திருக்கமாட்டார்கள்.விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் என அழைக்கப்படும் தற்கொலைப்படையைப் பற்றிப் பலரும் பலவிதக் கருத்துகளையும் விமர்சனங்களையும் சொல்லும்போது நான் நினைத்துக் கொள்ளும் ஒரு முகம் இந்த "இடியன்களில்" ஒன்று நான் கும்பிடுற தெய்வம் தான் காப்பாத்திச்சுது என்று சொல்லும் ஒவ்வொருத்தரும் இந்த இடியனுக்காகவும் ஒருகணம் பிரார்த்த்னை செய்திருப்பர் என்றே நினைக்கிறேன்.

இவர்களை நாம் நேரில் பார்த்திருப்போம் ஆனால் அவர்கள் கரும்புலிகள் எண்டு தெரிஞ்சிருக்காது சாதாரணமா புலியள் மாதிரி திரிவினம்.இரவானா படகெடுத்துக் கொண்டுபோய் இண்டைக்கு நேவி சிக்குமா என்று கடலில் காவலிருப்பார்கள்.இரவில் வெடியோசை கேட்கும் போது யார் பெத்த பிள்ளையோ என்று சொல்லும் வாயோடை கண்ணிலை வழியும் நீரைத்துடைச்சுவிட்டவர்களை நான் பார்த்திருக்கிறேன்.


Posted by Eelanathan at May 16, 2004 11:24 AM

ஓடுகிற வண்டியோட...- மீளும் நினைவுகள்-1
ஓடுகிற வண்டியோட...- மீளும் நினைவுகள்-2
ஓடுகிற வண்டியோட...- மீளும் நினைவுகள்-3