Dienstag, August 17, 2004

வாலிப வயதும் பாலியலும்-2

இர.அருள் குமரன்

நான் நினைக்கிறேன், மரத்தின் வேர் மண்ணில் இருப்பதுபோல் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆணிவேர் மனதினில் புதைந்திருக்கிறது. பாலியல் பிரச்சனைகளிலும் முதலில் அடிபடுவதும், அதிகம் காயப்படுவதும், ஆறாத்தழும்புகள் அடைவதும் மனதுதான், எனவே உளவியல் ரீதியாக இப்பிரச்சனையை அணுகுவது பலன் தரும்.

ஆரம்பம் எங்கே இருக்கிறது?
பாகுபாடு பல பிரச்சனைகளுக்கு ஆரம்பம், இதற்கும்தான். நீ ஆண், நீ பெண், நீ இன்னது செய்யலாம், இன்னது செய்யக்கூடாது என்று வரையறுக்கும்போது நாம் சில தவறுகள் செய்துவிடுகிறோம். சில உதாரணங்கள்

"அடேய் ராமு! விளையாட்டுல அடிபட்றது சகஜம், அதுக்காக ஏன் பொட்டச்சி மாதிரி அழறே!"


"பொண் குழந்தையா லட்சணமா கூடத்தில மாலுவோட விளையாடவேண்டியதுதானே? அந்த தடியன்களோட என்னடி பேச்சு?"

இந்தியாவின் சமூக அமைப்பில், பொதுவாக சிறுவர்களும் சிறுமிகளும் கலந்துபழக வாய்ப்புகள் குறைவு.

இத்தகைய சூழலில் சகோதரி, அம்மா தவிர பிற பெண்களுடன் பழகாத சிறுவன் இளைஞனாகி உள்ளுக்குள் மாற்றங்கள் அடையும்போது எதிர்ப்படும் பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்க வாய்ப்புக்கள் அதிகம்.

பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பெண்ணுக்கு, அந்நிய ஆண் வழிமறித்து சாதாரணமாக பேசத்துவங்கினாலே அநியாயத்துக்கு நடுக்கம் வருகிறது, அவளின் பயம் அவனுக்கு ஊக்கம் தருகிறது. இயல்பாக பதிலளித்து சென்றால் அவனே அவளின் நண்பனாக மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது என்பதும், அவனுடைய நோக்கம் சரியானதல்ல என்றால் அவனிடமிருந்து எப்படி தன்னை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்பதும் அவளுக்கு தெரிவதில்லை. இவ்வகைப்பெண்கள் பாலியல் வன்முறைக்கு பலியாகும்போது அதை தாங்கமுடியாமல் தன் தவறாகவும் நினைத்து தற்கொலைக்கு முயல்கிறார்கள். இத்தகைய சுழலில் பெற்றோர் தங்கள் பொறுப்புணர்ந்து அவளின் மனநிலை புரிந்து ஆறுதலாக செயல்படவேண்டும்.

ஒரு பருவப்பெண், அல்லது இளைஞனோ தன் எதிர்பாலரோடு நட்புடனிருப்பதை பெற்றோர் என்ற முறையில் நீங்கள் எதிர்ப்பதானால் வலுவான, நியாயமான காரணங்களை முன்வையுங்கள், கட்டாயம் அவர்கள் ஏற்பார்கள், அதை விடுத்து அவர்களை சிறுவர்களாகவே நடத்தினால் அவர்கள் சீர்தூக்கிப்பார்க்கும்போது நீங்கள் அடிபட்டுப்போய்விடுவீர்கள்.

வதந்திகளுக்கு ஒலிபரப்பு நிலையமாக ஒருபோதும் செயல்படாதீர்கள். சில உதாரணங்கள்

"டீ வசந்தி, நம்ம எதித்தவீட்டுப்பொண்ணு காரக்டர் சரியில்லேன்னு அப்பவே சொன்னேனே, நீதான் நம்பலை! இன்னிக்கு பஸ்ல வரச்சே பார்க்குல பாத்துட்டேன் அவளை, எவனோ ஒரு தடியனோட"

அந்த தடியன் அவள் அண்ணனாகவே கூட இருந்திருக்கலாம் அவர்களுக்கு அதை கவனிக்க அவசியமோ நேரமோ ஏது? சுவாரஸ்யமாக சொல்வதற்கு தேவையான விஷயம் ஏற்கனவே கிடைத்துவிட்டதே!

"அந்த மேனேஜரும் புது டைப்பிஸ்டும், இவ்ளோ நேரமா ரூமுக்குள்ள என்னடா பண்றாங்க! ஆபீஸ் வேலை பாக்கறாங்கன்னு என்னை நம்பச்சொல்றியா! ஒரு பார்வைலேயே சொல்லீடுவேன் மச்சி, பட்சி என்ன டைப்புன்னு"

இப்படி ஒரு கண்ணோட்டதில் நம் வாரிசுகளைப்பார்த்தாலும் எல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும்.

வாரிசுகளிடம் பேசும்போது நம்முடைய அலுவலக அழுத்தத்தை, பிற பிரச்சனைகளை தள்ளிவைத்துவிட்டு பேசவேண்டும் அதைவிட முக்கியமாக அவர்கள் சொல்வதை கவனித்து கேட்கவேண்டும். அவர்களிடம் பேசும் போது தகப்பன்/தாய் என்ற உயர்ந்த பீடத்தில் அமராமல் அவர்கள் நிலைக்கு இறங்கிவந்து பேசுங்கள், நாமும் அவர்கள் வயதை கடந்துதான் வந்திருக்கிறோம். நாம் கடந்துவந்த பாதையை சமயமறிந்து பகிர்ந்துகொண்டால் நம் தவறுகளில் கூட அவர்கள் கற்பார்கள்.

இது இப்படியிருக்க நவின நகர்புறங்களிலும், வெளிநாடுகளிலும் வேறு மாதிரி சூழல், அளவுக்கு மிஞ்சிய சுதந்திரம்

அது அடுத்து...nantri - உள்ளத்து ஓசை

Keine Kommentare: