Freitag, November 07, 2003

தேங்காய்ச்சொட்டு

என்னைப் பாதித்த சிறுகதைகளில் ஒன்று
மார்ச் 2001 எரிமலையில் பிரசுரமான
ந.மயூரரூபன் எழுதிய தேங்காய்ச்சொட்டு சிறுகதை


தேங்காய்ச் சொட்டு
ந.மயூரரூபன்

அம்மா ஒவ்வொரு நாளும் எரிச்சலோடும், சலிப்போடும் சொல்லிக்கொண்டிருப்பா.

'அரிசிப்பையை ஓட்டைபோட்டுட்டுது'
'அப்பளத்தைக் காணேல்லை' 'தேங்காய்ப் பாதியை சுரண்டிப்போட்டுது'
இப்பிடி அடிக்கடி அம்மா முணு முணுத்துக்கொண்டிருப்பா.
இதுக்கு என்ன செய்யிறது? ஒரு நாளெண்டாலும் பரவாயில்லை.
எந்த நாளும் இப்பிடித்தான் சரியான தொந்தரவு.
என்ன செய்யலாமெண்டு யோசிச்சன். எலிப்பொறி கண்ணில் பட்டுது எனக்கு பாவமாத்தான் இருந்தது. ஆனா, என்னத்தைச் செய்யிறது?
அணில் தேங்காய்ச்சொட்டின்ரை மணத்துக்குக் கட்டாயம் வருமெண்டு எனக்குத் தெரியும்.
இந்த அணில் தேங்காய்ச் சொட்டைத்தேடி வாறதை நினைச்சுப் பாக்கேக்குள்ள நாங்கள் எந்தச் சொட்டைப் பாத்து யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்தனாங்கள் எண்டு எனக்கு மட்டுமில்லை, வந்த எல்லோருக்கும். பிறகுகூட விளங்கேல்லைத்தான்.
சரி. வந்ததுதான் வந்தம். ஆனா. இங்க அந்த அணில் மாதிரி என்ன தொந்தரவு செய்தனாங்கள்?
நாங்களும் எங்கட பாடுமெண்டு அவங்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தம்.
ஒருதற்றை சோலிக்குக் கூடப்போகேல்லை.
நான் அந்த அணிலைக்கூட எத்தின தரம் யோசிச்சு மனமில்லாம கடைசியா அதின்ர ஆக்கினை பொறுக்கமாட்டாமத்தான்.
ஆனா நாங்கள்? இவங்கள் எங்களை இப்பிடிச்செய்யிறதுக்கு முன்னால. நான் அந்த அணிலுக்காகயோசித்த மாதிரி யோசிச்சிருப்பாங்களே.
அப்பிடி யோசிச்சிருப்பாங்களெண்டு நானெண்டா நினைக்கேல்லை.
நான் அந்தப் பொறியை ஏத்திப்போட்டுப் பட்டபாடு எனக்குத்தான் தெரியும்.
அணில் கீச் கீச் எண்டு கத்தேக்குள்ள. நெஞ்சுக்குள்ள ஒரு தடக் பொறுக்கமாட்டோம். பொறியை விடுவிச்சு விடுவமோ எண்டும் நினைச்சன்.
இடைக்கிடை பொறி வச்ச இடத்தை ஓரக்கண்ணால் பாத்துக்கொண்டு இருந்தன்.
அணில் வரேல்லை. எனக்கு அப்பிடிப்பாத்துக் கொண்டிருக்கத் தைரியமில்லை எழும்பிப்போய்விட்டேன்.
எங்களை அதுதான் என்னையும் என்ர சினேகிதியையும் பிடிச்சுக்கொண்டு போகேக்குள்ள, எனக்கு இதொண்டும் நினைவுவரேல்லை. இலேசான பயந்தான் இருந்தது. விசாரிச்சுப்போட்டு விட்டுவிடுவாங்கள்தானே.
ஆனா நாலைஞ்சு ஆமிக்காரங்கள். எனக்கு பயங்கரமாய் ஏதோ நினைப்புகள்.
ஆரோ கையைப் பிடிச்சுக் கூட்டிக்கொண்டு வந்து இருட்டுக்குள்ள தள்ளிவிட.
சுத்திவர பேயள் நிண்டு குதிக்கிற மாதிரி எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல.
மரத்துப்போன மாதிரி. ஏதோ ஒண்டு என்னைக் கவ விப்பிடிச்ச மாதிரி. அந்த நேரத்திலையும் நான் இதைத்தான் யோசிச்சன். நான் இல்லை நாங்கள் அப்பிடி என்னதான் செய்தனாங்கள்? அதுக்கு இப்பகூட விடை கிடைக்கேல்ல.
நான் அந்த அணிலுக்கு வச்ச பொறியை எடுத்து விடுவமோ எண்டு யோசிச்சமாதிரி அவங்கள். யோசிச்சிருப்பாங்களே? அப்பிடி யோசிச்சிருக்க மாட்டாங்களெண்டு அப்பத்தான் விளங்கிச்சுது. முந்திக் கேள்விப்பட்ட விசயங்களுக்கு இப்பத்தான் வடிவம் கிடைச்சுது.
நான் அந்த அணிலைப் பிடிச்சுவைச்சு, ஒரு சித்திரவதைகூடச் செய்யேல்லை. அதை சீண்டிவிட்டு வேடிக்கை பாக்கேல்லை. அதுக்குப் பல்லால கடிக்கேல்லை. நெருப்பால சுடேல்லை. அடிக்கக்கூட இல்லை. அதின்ர தன் மானத்தைச் சுடுற மாதிரி மானத்தோட விளையாடேல்லை.
ஒரே ஒரு சத்தம்தான் 'படார்.' என்று கேட்டுது. ஓடிப்போய்ப் பாத்தன், தலை பொறிக்குள்ள அம்பிட்டுது. பொறியை ஒரு சுற்றுச் சுற்றி இழுத்துப்போட்டு அடங்கிவிட்டுது கண நேரந்தான்.
ஆனால். அவங்கள் எங்களை ஒரு நாள் முழுக்க அறையுக்குள்ள அடைச்சு வச்சு. வாறவங்கள் போறவங்களெல்லாம்.
அதுகளெல்லாம் என்னத்துக்கு இப்ப
இப்பகூட அதை நினைக்கேக்குள்ள முகம் உடம்பெல்லாம் தீப்பிடிச்ச மாதிரி. அப்பிடி ஓர் உணர்வுதான் ஆகா என்ர உடம்பு எங்கள மோசமா சித்திரவதை செய்தாங்கள். என்னென்ன செய்ய முடியுமோ எல்லாம் செய்தாங்கள்.
ஆரம்பத்தில் பெருங்குரலில் அலறினனாங்கள்தான், ஆனா. போகப்போக குரல் வரேல்லை. எவ்வளவு நேரமெண்டு அலறுறது. தொண்டையும் வறண்டு போட்டுது.
உடம்பெல்லாம் கந்தலாப்போன மாதிரி தொய்ஞ்சு கிடந்துது. வேதனை உடம்பெல்லாம் நோ அசைய முடியேல்லை. நெருப்புப் பிடிச்ச மாதிரி ஒரு உணர்வு. கண்களில் சூடான நீர் திரண்டு வழிஞ்சுது.
சிகரட்டுப் புண்களும், பல்லுக்காயங்களும், அடியின்ர வலிகளும் மரத்துப்போன மாதிரி நினைப்பு.
எனக்கு என் மேலேயே ஆத்திரம் வந்தது. ஏன் இன்னும் உயிர் போகேல்லை?
இருட்டினாப்பிறகு இரண்டு பேர் வந்தாங்கள். என்னையும் என்ர சினேகிதியையும் இழுத்துக்கொண்டு போனாங்கள். அந்த இருட்டுக்குள்ள சனத்தின்ர 'ஊ' என்ற ஊளையில் அது ஒரு வெளியெண்டு தெரிஞ்சுது. அதோட நடக்கப் போறதும் தெரிஞ்சுது.
அணில் பொறியில அம்பிட்டவுடன் நான் அம்மாவைக் கூப்பிட்டன்.
அதை அங்கால தூக்கிக் கொண்டு போகச் சொல்லிக் கத்தினன்.
அம்மா குசினிக்குள் இருந்தபடியே என்னையே தூக்கிக்கொண்டு போய் வெளியில போடச் சொன்னா 'ஐயோ எனக்குத் தெரியாது' எண்டு நான் அந்தப் பக்கமே பாக்காமல் வெளியில ஓடிவிட்டன்.
பேந்து அதை தம்பிதான் எடுத்துக் கொண்டுபோய் வெட்டித் தாட்டவன்.
அண்டைக்கு நான் திரும்ப வீட்டுக்குள்ள போனபோது பார்த்தன், அது கொஞ்சம் பெரிய அணில் மாதிரி எனக்குத் தெரிஞ்சுது.
வளையில இருந்துகொண்டு வாலைத்தூக்கித் தூக்கி அடிச்சபடி கீச் கீச் எண்டு கத்திக் கொண்டிருந்தது.
அதுதாய் அணில் போல ஓ அது தான் அந்த அடிபட்டுச் செத்ததின்ர தாய் அது அண்டு முழுக்க அந்த இடத்தில் நிண்டு வாலை அடிச்சுக்கொண்டு கத்தினபடி இருந்தது.
இடைக்கிடை வளையில அங்கையுமிஞ்சையும் ஓடிப்போட்டு வந்து திரும்பவும் கத்திச்சுது.
அது தன்ர குட்டி அணிலை கூப்பிடுறது போல எனக்கு இருந்துது.
நிலைகொள்ளாமல் அது தவிச்சுக் கொண்டிருக்குது எண்டு நான் ஊகிச்சன்.
எனக்கு சரியான கவலையாயிருந்துது. அந்தத் தாயணில் அழுகிற மாதிரி ஒரு நினைப்பு.
எனக்கு அண்டைக்கு நித்திரையே வரேல்லை.
அழுது கொண்டுதான் படுத்திருந்தன். இப்ப எனக்கு இந்த தாயணிலை நினைக்கேக்குள்ள என்ர அம்மான்ர நினைப்புத்தான் வரும்.
அவவும் இப்பிடித்தான் ரியூசனுக்குப் போன பிள்ளை வருகுது.. வருகுது எண்டு வாசலையே பார்த்துக்கொண்டு நிண்டிருப்பா.
எத்தின நாள் சாப்பாடில்லாம சுருண்டிருப்பா. எவ்வளவு இரவுகள் நித்திரையில்லாம கண்ணீர்விட்டுப் புலம்பியிருப்பா
எனக்கு இப்பவும் கவலையாத்தான் கிடக்குது. எங்களுக்கு முதல் புதைஞ்சவையெல்லாம் கிண்டித் தூக்கி ஆராய்ச்சி செய்யினம். அம்மாவுக்கு அது என்ர நினைப்பை இன்னும் நல்லாக்கிளறி விட்டிருக்குமெண்டு நினைக்கிறன்.
அங்க அம்மா என்னை அடையாளம் காண காத்துக்கொண்டிருப்பா.. அது சரி அந்தக் குட்டியணிலின்ர கதிமற்ற அணிலுகளுக்கும் தெரிஞ்சிருக்குமோ?
தெரிஞ்சிருக்காதெண்டுதான் நினைக்கிறன்.
அப்பிடித் தெரிஞ்சிருந்தா தேங்காய்ச்சொட்டைத் திரும்பிப் பாக்குங்களே.
ஆனா எங்களைப் பற்றித் தெரிஞ்சிருந்தும் எத்தின பேர் அந்தச் சொட்டை சுவடெடுத்துத் தேடி வருகினம். இதுக்கு என்னத்தைச் செய்யுறது.
ம். எனக்கேன் மற்றாக்களைப் பற்றிக் கவலை?
அம்மாவை நினைக்க ஓ அந்தத் தாயணில் தன்ர குட்டியணிலின்ர உடல் கூட்டை கடைசி வரையும் கண்டிருக்காது.
அது மாதிரி அம்மாவும்.

nantri-erimalai

தேங்காய்ச் சொட்டு சிறுகதை மிக மிக அருமையாக இருந்தது. எலிப்பொறியில் சிக்கிய அணிலும் சிறீலங்கா இராணுவத்திடம் சிக்கிய தமிழனும்- ந.மயூரரூபன் அதை எழுதிய விதம்- நிட்சயமாக அவர் அந்த அவஸ்தையை அனுபவித்துத்தான் எழுதியிருப்பாரோ என்று என்னைச் சிந்திக்க வைத்தது. வாசித்து வெகுநேரமாகியும் .. நாட்கள் நகர்ந்தும் மனசை விட்டகலாமல்.. இன்னும் என்னை என்னவோ செய்கிறது.

சந்திரவதனா. செல்வகுமாரன்
சுவாபிஸ்கால், ஜேர்மனி.

பிரசுரம் - எரிமலை(http://www.erimalai.com/2001-may/akkarai_pookkal.html)