ஈழநாதன்
தாயே,
நான் என்ன சொல்லிவிட்டேன்
நீயேன்
தளர்ந்த மார்படித்து
ஒப்பாரி வைக்கிறாய்?
களுத்துறை
சிறையறையில்
என் உற்றவன்
அதுதான் உன் மகன்,
முன்னொரு திங்கள்
முந்நூறு நாள் சுமந்து
பெற்றெடுத்த
மூத்த மகன்!
காணமற் போனபின்பு
கனகாலம் காத்திருந்து
போய்விட்டான் என்றழுது
திதி செய்த மூத்தமகன்!
சப்பாத்துக் கால்களுக்கும்
சாவுக்கும் தப்பி
உயிரோடு இருப்பதைச்
சொல்லிப்போக வந்தால்...!
என் முகந்தடவி
முடிகோதி,
மார்போடு சேர்த்தணைத்து
ஏனித்தனை
ஆர்ப்பாட்டம்?
உன் மகன் மூச்சை
தினமும் சுவாசித்த
என் மூச்சை
மோப்பதில்தான்
உனக்கு,
எத்தனை விருப்பம்!
ஈராறு வருடங்கள்
கொழும்புக்கும் களுத்துறைக்கும்
பேயாய் அலைந்ததில்
குழிவிழுந்த கண்களில்தான்
மகனையே கண்டது போல்
எத்துணை மகிழ்சி!
சிறை மீண்டு வந்தவன்
மனிதனே அல்லவென்று
கூப்பிய உன் கரங்களுக்கு
யார் சொல்லிக்கொடுத்தார்கள்?
உன் மகன் இன்னும்
உயிரோடிருப்பதை
செவிவழிக் கேட்டு
மனமெலாங் குளிர்ந்து
மீண்டும் சுரக்கிறதா
முலைப்பால்?
ஈழநாதன்
nantri - Thatstamil
Freitag, Juli 09, 2004
Abonnieren
Posts (Atom)