புத்தியைச் செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது செருப்பே புத்திசாலியாகிவிட்டது. நேற்றைக்கு டிஸ்கவரியில் அடிடாஸின் புதிய காலணியைப் பற்றிய விளக்கத்தைப் பார்த்தேன். உலகிலேயே முதன் முறையாக நுண்செயலி பொருத்தப்பட்ட காலணியை அடிடாஸ் வடிவமைத்திருக்கிறது. ஏன் நுண்செயலி ஓடும் பரப்புக்கு ஏற்றபடி (தார் ரோடு, மண் தரை, புல்வெளி) உங்கள் காலின் அழுத்தம் மாறுபடும் அடிடாஸின் இந்தக் காலணியிலிருக்கும் பாலிமர் நுரைப்பஞ்சுகளின் அழுத்தம் மற்றும் தகவுதிறன் முதலாம் அடியில் கணக்கிடப்பட்டு, கால் அடுத்ததாகத் தரையில் பாவுவதற்கு முன்பு மாற்றியமைக்கப்படும். இந்த முறையில் உயவைக் குறைப்பதன்மூலம் பந்தய வீரரின் வேகம் அதிகரிக்கப்படும், கூடவே வீரரின் உடம்பிலிருந்து தரைக்கு மாற்றப்படும் சக்தி குறைவதால் வீரரின் சக்தி விரயம் தடுக்கப்படுகிறது.
குதிகால் பகுதியில் இருக்கும் இந்த மிகச் சிறிய எலெக்ட்ரானிக் அமைப்பு தொடர்ச்சியாக பரப்பின் தன்மையையும் அணிபவரின் ஓட்டவீதத்தையும் கணக்கிட்டு தன்னைத் தானே மாற்றியமைத்துக் கொள்கிறது. தற்சமயம் பாவனையாளர்கள் பரப்பின் தன்மைக்கு ஏற்றபடி வேவ்வேறு காலணிகளை மாற்றிக் கொள்கிறார்கள். என்னுடைய அலுவலக நண்பன் கோடை காலத்தில் மிதிவண்டியில் வரும்பொழுது ஒரு காலணியில் வருவான், பின்னர் ஆய்வகத்தில் வேறு, மதிய உணவு இடைவேளையில் விளையாட்டுக் கூடம் போய் உடற்பயிற்சி செய்ய ஒரு காலணி, மாலையில் டென்னிஸ் விளையாட வேறு காலணி, மீண்டும் மிதிவண்டி காலணி என்று மாற்றிக் கொண்டே இருப்பான். இதற்கு முக்கிய காரணம், கடினப்பரப்பில் பாவிக்க ஏற்றபடி செய்யப்பட்ட உடற்பயிற்சி காலணி, புல்தரையில் டென்னிஸ் ஆட ஏற்றதில்லை. ஆனால் அடிடாஸின் இந்தக் காலணி பரப்புக்கு ஏற்றபடி தன்னைத்தானே மாற்றிக் கொள்வதால் எல்லா பரப்புகளிலும் பயன்படும்.
டிஸ்கவரியில் இதை வடிவமைத்த குழுவிலிருந்து ஒருவரை பேட்டி கண்டார்கள். அவரிடம் மூன்றுவருடங்களாக நடந்துவந்த இந்தக் கண்டுபிடிப்புத் திட்டத்தின் முக்கியச் சிக்கல் என்ன என்று கேட்டதற்குப் பொருத்தப்படும் மின்சாதனத்தின் எடையை காலணியின் மொத்த எடையான 400 கிராமிற்குப் பத்தில் ஒரு பங்காக (40 கிராம்) வைத்திருப்பதுதான் என்று சொன்னார்.
விலை அதிகமில்லை. 250 அமெரிக்க டாலர்கள்தான். ஆனால் இந்தக் காலணி பல்வேறு விதமான காலணிகளை வாங்குவதைத் தவிர்ப்பதாலும், தேய்மானத்தைக் குறைத்து நீண்ட நாட்கள் உழைக்க வல்லது என்பதாலும் இதன் விலை பொருத்தமானதாகத்தான் இருக்கும்.
நன்றி - வெங்கட்
Donnerstag, Mai 13, 2004
Abonnieren
Posts (Atom)