கு. செல்வராசு
படம் : சிவராமன்
ஒருவரின் வாழ்வில் நிகழும் அசாதாரண சம்பவங்கள் அவரின் ஒட்டு மொத்த வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடுகின்றன.அப்படித்தான், கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத அந்தத் துயரநிகழ்வு அச் சிறுமியின்வாழ்விலும் நடந்தது.எதிர்பாராமல் நடந்தவெடிவிபத்தில்கைகளையும், கால்களையும் இழந்துவிட்ட சிறுமிமாளவிகாவின் (15) எதிர்காலம் கேள்விக்குறியாய்ப்போனதாகத்தான் பலரும் கருதினர்.
ஆனால், சாதிக்க வேண்டும் என்ற வெறியும், நம்பிக்கையும், ஆக்கப்பூர்வமான சிந்தனையும் இருந்தால், எந்த வெற்றியும் மிகச்சாதாரணமானதே என்று உலகத்துக்கு நிரூபித்திருக்கிறார் மாளவிகா. பத்தாம் வகுப்புத் தேர்வில் மூன்று பாடங்களில் தமிழகத்தில் முதலிடத்துடன் 483 மதிப்பெண் பெற்று சாதனைச் சிகரத்தில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கும் அவர் வாழ்வின்" பிளாஷ் பேக்':
அது, 2002-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி. வெள்ளிக்கிழமை. தேசத்தை அதிர்ச்சியடையச் செய்த அச் சம்பவம் நடந்தது.
டிசம்பர் 13 நாடாளுமன்றத் தாக்குதலைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டாவிலிருந்து ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லை நோக்கி இந்திய ராணுவத்தின் 250 ராணுவ லாரிகள், வாகனங்கள் ஆயுதங்களுடன் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தன.
அப்போது, எல்லையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள பிகானீரின் உதாசர் என்ற ராணுவப் பகுதி அருகே ஒரு ராணுவ லாரியில் தீப்பிடித்தது.
காதைப் பிளக்கும் சப்தத்துடன் லாரியில் இருந்த ராக்கெட் குண்டுகள் வெடித்து நாலாபுறமும் சிதறின. எங்கும் புகைமயம். மற்ற லாரிகளுக்கும் தீ பரவியது. 70 லாரிகள் சம்பலாயின.
அருகில் உள்ள வீடுகளில் ஜன்னல்கள் அதிர்ந்தன. குண்டுகள் பறந்து வந்து விழுந்தன. அப்படித்தான், டம்ளர் சைஸில் உருளை வடிவில் உள்ளீடற்ற ஒரு பொருள் சிறுமி மாளவிகாவின் வீட்டிலும் வந்து விழுந்தது. உள்பக்கம் வெற்றிடமாகவும், மேல் பகுதியில் மட்டும் லேசாக மூடப்பட்டிருந்தது. பார்க்க அழகாக இருக்கிறதே என்று அதை எடுத்து "ஷோகேஸில்' வைத்தார்.
Photo: R. Ragu
2002, மே மாதம் 26-ம் தேதி. பகல் சுமார் 1 மணி. தரையில் உட்கார்ந்து கொண்டு, தனது கிழிந்துபோன ஜீன்ûஸ "பெவிக்கால்' போட்டு ஒட்டிக் கொண்டிருந்தார் மாளவிகா. ஒட்டிய பகுதியை எதையாவது வைத்தத் தட்ட நினைத்தவரின் கண்களில் அந்தப் பொருள் படுகிறது.
எடுத்துத் தட்டினார். அவ்வளவுதான். எதிர்பாராத அச் சம்பவம் நிகழ்ந்தே விட்டது. அப் பொருள் வெடித்துச் சிதறிது. சுற்றுப் பகுதி முழுவதும் மிகப் பெரிய சப்தம். பகல் 1.10 என்று காட்டிய கடிகாரம் அப்படியே நின்றுபோனது.
அந்தப் பொருளைப் பிடித்திருந்த மாளவிகாவின் கைகள் முழங்கைக்குக் கீழே அந்த இடத்திலேயே சிதைந்து காணாமல் போயின. முழங்காலுக்குக் கீழ் பகுதியில் இரண்டு கால்களின் எலும்புகளும் நொறுங்கிப் போனது.
""பிகானீர் மருத்துவமனையில் ஒரு நாள். ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் 3 மாதத் தீவிரச் சிகிச்சை. பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்த கால்பகுதியின் சதைகளை ஒட்ட வைத்தனர். எலும்பு வளர்ந்து ஒட்டிக் கொள்ளும் என்று முதலில் டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால், 6 மாதங்களுக்குப் பிறகு, அதற்குச் சாத்தியமில்லை; தில்லிக்குத்தான் செல்ல வேண்டும் என்று கைவிட்டுவிட்டனர். அதற்குப் பின், சென்னைக்கு அழைத்து வந்தேன்.'' -பட்ட கஷ்டங்களை நினைவு கூர்கிறார் தாய் ஹேமா.
தந்தை கிருஷ்ணன், ராஜஸ்தான் மாநில குடிநீர் வாரியத்தில் செயல் பொறியாளர். இவர்களது பூர்விகம் கும்பகோணம்.
சென்னை வந்ததும், ஷெனாய் நகரில் உள்ள ஹேமாவின் சகோதரிகள் வீட்டில் தங்கி மாளவிகாவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அண்ணா நகரில் உள்ள "போன் அண்ட் ஜாயின்' கிளினிக்கில் டாக்டர்கள் சிவமுருகன், சதீஷ் ஆகியோரின் முயற்சியால் கால் எலும்புகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
வலது காலில் பிளேட் வைக்கப்பட்டது. இடது காலில் உடைபட்ட எலும்புப் பகுதியில் ஸ்குரூ போடப்பட்டது. ஜூலை 18-ம் தேதி மாளவிகாவுக்குப் பிறந்த நாள். இழந்த கைகளுக்குப் பதிலாக ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட "ஓட்டோ வாக்' என்ற செயற்கைக் கைகளை தந்தை வாங்கித் தந்தார். ஒரு கையின் விலை ரூ.2.5 லட்சம். உடல் அசைவுகளுக்கு ஏற்ப அதில் உள்ள விரல்களை ஓரளவுக்கு இயக்கக் கூடியது இது.
கால் எழும்புகள் ஒட்ட வைக்கப்பட்டு, செயற்கைக் கைகள் கிடைத்த பின்புதான், புதிய வாழ்க்கைப் பயணத்தை நம்பிக்கையோடு தொடங்கினார் மாளவிகா.
2003, அக்டோபர் மாதம் மெல்ல நடக்க ஆரம்பித்தார். அவரது வகுப்புத் தோழிகள் 10-ம் வகுப்புத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். பாதியில் விட்ட படிப்பைத் தொடர வேண்டும்; தோழிகள் 10-ம் வகுப்பு முடிக்கும் போது தானும் முடிக்க வேண்டும் என்ற வெறி மாளவிகாவுக்கு.
10-ம் வகுப்புத் தனித் தேர்வுக்கு, ஷெனாய் நகரில் உள்ள அருள் கோச்சிங் சென்டரில் அக்டோபரில் சேர்ந்தார். காலையில் 2 மணி நேரம், மாலையில் 2 மணி நேரப் பயிற்சி. அவ்வளவு நேரம்தான் ஓரிடத்தில் அமரக்கூட முடியும்.
""தினமும் 3 மணி நேரம் படிக்க ஆரம்பித்தேன். தேர்வு நாள்களில் அதிகாலை 2 மணிவரைகூடப் படிப்பேன். வீட்டில் சத்தம்போட்டு கத்திக் கத்திப் படிப்பேன்'' என்கிறார் மாளவிகா.
செயற்கை விரல்கள் மூலம் தேர்வு எழுத முடியாது என்பதால், மாளவிகா பதிலைச் சொல்லச் சொல்ல மற்றவர்கள் எழுதினர். அப்படி எழுதி இந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார்.
அறிவியல், கணிதம் ஆகிய இரண்டிலும் 100 மதிப்பெண்கள். இந்தியில் 97. இந்த மூன்றிலும் தமிழகத்தில் முதலிடம். சமூக அறிவியல் - 97. ஆங்கிலம் - 89. மொத்த மதிப்பெண்கள் - 483.
அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் பள்ளியில் படித்த இவரது சகோதரி காதம்பரி, இந்த ஆண்டு பிளஸ் டூ-வில் 1200-க்கு 1162 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
""எந்தச் சூழ்நிலையிலும் மனத் தளர்ச்சி அடையக்கூடாது. முடியும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி உறுதி.'' என்கிறார்.
ஆங்கிலம், தமிழ், இந்தி மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசுகிறார்.
""விபத்து நடப்பதற்கு முன்பு நீச்சல், ஸ்கேட்டிங், நடனம் ஆகியவை செய்து கொண்டிருந்தேன். திரும்பவும் நடனமாட வேண்டும். கார் ஓட்ட வேண்டும்.'' என்பது இவரது ஆசை.
எதிர்கால லட்சியம்?
""ஐஏஎஸ்'' - உறுதியாகச் சொல்கிறார்.
""ஐபிஎஸ் படிக்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. ஆனால், அது முடியாது. எனவே, ஐஏஎஸ்-ஆகி மக்களுக்கு முடிந்த அளவுக்குச் சேவை செய்ய வேண்டும். ஊனமுற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.'' என்கிறார் இந்த சாதனைச் சிகரம்.
தமிழகத்திலிருந்து இன்னொரு ஐஏஎஸ்?. வெல்லட்டும்.
nantri-Thinamani