Freitag, November 07, 2003

தேங்காய்ச்சொட்டு

என்னைப் பாதித்த சிறுகதைகளில் ஒன்று
மார்ச் 2001 எரிமலையில் பிரசுரமான
ந.மயூரரூபன் எழுதிய தேங்காய்ச்சொட்டு சிறுகதை


தேங்காய்ச் சொட்டு
ந.மயூரரூபன்

அம்மா ஒவ்வொரு நாளும் எரிச்சலோடும், சலிப்போடும் சொல்லிக்கொண்டிருப்பா.

'அரிசிப்பையை ஓட்டைபோட்டுட்டுது'
'அப்பளத்தைக் காணேல்லை' 'தேங்காய்ப் பாதியை சுரண்டிப்போட்டுது'
இப்பிடி அடிக்கடி அம்மா முணு முணுத்துக்கொண்டிருப்பா.
இதுக்கு என்ன செய்யிறது? ஒரு நாளெண்டாலும் பரவாயில்லை.
எந்த நாளும் இப்பிடித்தான் சரியான தொந்தரவு.
என்ன செய்யலாமெண்டு யோசிச்சன். எலிப்பொறி கண்ணில் பட்டுது எனக்கு பாவமாத்தான் இருந்தது. ஆனா, என்னத்தைச் செய்யிறது?
அணில் தேங்காய்ச்சொட்டின்ரை மணத்துக்குக் கட்டாயம் வருமெண்டு எனக்குத் தெரியும்.
இந்த அணில் தேங்காய்ச் சொட்டைத்தேடி வாறதை நினைச்சுப் பாக்கேக்குள்ள நாங்கள் எந்தச் சொட்டைப் பாத்து யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்தனாங்கள் எண்டு எனக்கு மட்டுமில்லை, வந்த எல்லோருக்கும். பிறகுகூட விளங்கேல்லைத்தான்.
சரி. வந்ததுதான் வந்தம். ஆனா. இங்க அந்த அணில் மாதிரி என்ன தொந்தரவு செய்தனாங்கள்?
நாங்களும் எங்கட பாடுமெண்டு அவங்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தம்.
ஒருதற்றை சோலிக்குக் கூடப்போகேல்லை.
நான் அந்த அணிலைக்கூட எத்தின தரம் யோசிச்சு மனமில்லாம கடைசியா அதின்ர ஆக்கினை பொறுக்கமாட்டாமத்தான்.
ஆனா நாங்கள்? இவங்கள் எங்களை இப்பிடிச்செய்யிறதுக்கு முன்னால. நான் அந்த அணிலுக்காகயோசித்த மாதிரி யோசிச்சிருப்பாங்களே.
அப்பிடி யோசிச்சிருப்பாங்களெண்டு நானெண்டா நினைக்கேல்லை.
நான் அந்தப் பொறியை ஏத்திப்போட்டுப் பட்டபாடு எனக்குத்தான் தெரியும்.
அணில் கீச் கீச் எண்டு கத்தேக்குள்ள. நெஞ்சுக்குள்ள ஒரு தடக் பொறுக்கமாட்டோம். பொறியை விடுவிச்சு விடுவமோ எண்டும் நினைச்சன்.
இடைக்கிடை பொறி வச்ச இடத்தை ஓரக்கண்ணால் பாத்துக்கொண்டு இருந்தன்.
அணில் வரேல்லை. எனக்கு அப்பிடிப்பாத்துக் கொண்டிருக்கத் தைரியமில்லை எழும்பிப்போய்விட்டேன்.
எங்களை அதுதான் என்னையும் என்ர சினேகிதியையும் பிடிச்சுக்கொண்டு போகேக்குள்ள, எனக்கு இதொண்டும் நினைவுவரேல்லை. இலேசான பயந்தான் இருந்தது. விசாரிச்சுப்போட்டு விட்டுவிடுவாங்கள்தானே.
ஆனா நாலைஞ்சு ஆமிக்காரங்கள். எனக்கு பயங்கரமாய் ஏதோ நினைப்புகள்.
ஆரோ கையைப் பிடிச்சுக் கூட்டிக்கொண்டு வந்து இருட்டுக்குள்ள தள்ளிவிட.
சுத்திவர பேயள் நிண்டு குதிக்கிற மாதிரி எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல.
மரத்துப்போன மாதிரி. ஏதோ ஒண்டு என்னைக் கவ விப்பிடிச்ச மாதிரி. அந்த நேரத்திலையும் நான் இதைத்தான் யோசிச்சன். நான் இல்லை நாங்கள் அப்பிடி என்னதான் செய்தனாங்கள்? அதுக்கு இப்பகூட விடை கிடைக்கேல்ல.
நான் அந்த அணிலுக்கு வச்ச பொறியை எடுத்து விடுவமோ எண்டு யோசிச்சமாதிரி அவங்கள். யோசிச்சிருப்பாங்களே? அப்பிடி யோசிச்சிருக்க மாட்டாங்களெண்டு அப்பத்தான் விளங்கிச்சுது. முந்திக் கேள்விப்பட்ட விசயங்களுக்கு இப்பத்தான் வடிவம் கிடைச்சுது.
நான் அந்த அணிலைப் பிடிச்சுவைச்சு, ஒரு சித்திரவதைகூடச் செய்யேல்லை. அதை சீண்டிவிட்டு வேடிக்கை பாக்கேல்லை. அதுக்குப் பல்லால கடிக்கேல்லை. நெருப்பால சுடேல்லை. அடிக்கக்கூட இல்லை. அதின்ர தன் மானத்தைச் சுடுற மாதிரி மானத்தோட விளையாடேல்லை.
ஒரே ஒரு சத்தம்தான் 'படார்.' என்று கேட்டுது. ஓடிப்போய்ப் பாத்தன், தலை பொறிக்குள்ள அம்பிட்டுது. பொறியை ஒரு சுற்றுச் சுற்றி இழுத்துப்போட்டு அடங்கிவிட்டுது கண நேரந்தான்.
ஆனால். அவங்கள் எங்களை ஒரு நாள் முழுக்க அறையுக்குள்ள அடைச்சு வச்சு. வாறவங்கள் போறவங்களெல்லாம்.
அதுகளெல்லாம் என்னத்துக்கு இப்ப
இப்பகூட அதை நினைக்கேக்குள்ள முகம் உடம்பெல்லாம் தீப்பிடிச்ச மாதிரி. அப்பிடி ஓர் உணர்வுதான் ஆகா என்ர உடம்பு எங்கள மோசமா சித்திரவதை செய்தாங்கள். என்னென்ன செய்ய முடியுமோ எல்லாம் செய்தாங்கள்.
ஆரம்பத்தில் பெருங்குரலில் அலறினனாங்கள்தான், ஆனா. போகப்போக குரல் வரேல்லை. எவ்வளவு நேரமெண்டு அலறுறது. தொண்டையும் வறண்டு போட்டுது.
உடம்பெல்லாம் கந்தலாப்போன மாதிரி தொய்ஞ்சு கிடந்துது. வேதனை உடம்பெல்லாம் நோ அசைய முடியேல்லை. நெருப்புப் பிடிச்ச மாதிரி ஒரு உணர்வு. கண்களில் சூடான நீர் திரண்டு வழிஞ்சுது.
சிகரட்டுப் புண்களும், பல்லுக்காயங்களும், அடியின்ர வலிகளும் மரத்துப்போன மாதிரி நினைப்பு.
எனக்கு என் மேலேயே ஆத்திரம் வந்தது. ஏன் இன்னும் உயிர் போகேல்லை?
இருட்டினாப்பிறகு இரண்டு பேர் வந்தாங்கள். என்னையும் என்ர சினேகிதியையும் இழுத்துக்கொண்டு போனாங்கள். அந்த இருட்டுக்குள்ள சனத்தின்ர 'ஊ' என்ற ஊளையில் அது ஒரு வெளியெண்டு தெரிஞ்சுது. அதோட நடக்கப் போறதும் தெரிஞ்சுது.
அணில் பொறியில அம்பிட்டவுடன் நான் அம்மாவைக் கூப்பிட்டன்.
அதை அங்கால தூக்கிக் கொண்டு போகச் சொல்லிக் கத்தினன்.
அம்மா குசினிக்குள் இருந்தபடியே என்னையே தூக்கிக்கொண்டு போய் வெளியில போடச் சொன்னா 'ஐயோ எனக்குத் தெரியாது' எண்டு நான் அந்தப் பக்கமே பாக்காமல் வெளியில ஓடிவிட்டன்.
பேந்து அதை தம்பிதான் எடுத்துக் கொண்டுபோய் வெட்டித் தாட்டவன்.
அண்டைக்கு நான் திரும்ப வீட்டுக்குள்ள போனபோது பார்த்தன், அது கொஞ்சம் பெரிய அணில் மாதிரி எனக்குத் தெரிஞ்சுது.
வளையில இருந்துகொண்டு வாலைத்தூக்கித் தூக்கி அடிச்சபடி கீச் கீச் எண்டு கத்திக் கொண்டிருந்தது.
அதுதாய் அணில் போல ஓ அது தான் அந்த அடிபட்டுச் செத்ததின்ர தாய் அது அண்டு முழுக்க அந்த இடத்தில் நிண்டு வாலை அடிச்சுக்கொண்டு கத்தினபடி இருந்தது.
இடைக்கிடை வளையில அங்கையுமிஞ்சையும் ஓடிப்போட்டு வந்து திரும்பவும் கத்திச்சுது.
அது தன்ர குட்டி அணிலை கூப்பிடுறது போல எனக்கு இருந்துது.
நிலைகொள்ளாமல் அது தவிச்சுக் கொண்டிருக்குது எண்டு நான் ஊகிச்சன்.
எனக்கு சரியான கவலையாயிருந்துது. அந்தத் தாயணில் அழுகிற மாதிரி ஒரு நினைப்பு.
எனக்கு அண்டைக்கு நித்திரையே வரேல்லை.
அழுது கொண்டுதான் படுத்திருந்தன். இப்ப எனக்கு இந்த தாயணிலை நினைக்கேக்குள்ள என்ர அம்மான்ர நினைப்புத்தான் வரும்.
அவவும் இப்பிடித்தான் ரியூசனுக்குப் போன பிள்ளை வருகுது.. வருகுது எண்டு வாசலையே பார்த்துக்கொண்டு நிண்டிருப்பா.
எத்தின நாள் சாப்பாடில்லாம சுருண்டிருப்பா. எவ்வளவு இரவுகள் நித்திரையில்லாம கண்ணீர்விட்டுப் புலம்பியிருப்பா
எனக்கு இப்பவும் கவலையாத்தான் கிடக்குது. எங்களுக்கு முதல் புதைஞ்சவையெல்லாம் கிண்டித் தூக்கி ஆராய்ச்சி செய்யினம். அம்மாவுக்கு அது என்ர நினைப்பை இன்னும் நல்லாக்கிளறி விட்டிருக்குமெண்டு நினைக்கிறன்.
அங்க அம்மா என்னை அடையாளம் காண காத்துக்கொண்டிருப்பா.. அது சரி அந்தக் குட்டியணிலின்ர கதிமற்ற அணிலுகளுக்கும் தெரிஞ்சிருக்குமோ?
தெரிஞ்சிருக்காதெண்டுதான் நினைக்கிறன்.
அப்பிடித் தெரிஞ்சிருந்தா தேங்காய்ச்சொட்டைத் திரும்பிப் பாக்குங்களே.
ஆனா எங்களைப் பற்றித் தெரிஞ்சிருந்தும் எத்தின பேர் அந்தச் சொட்டை சுவடெடுத்துத் தேடி வருகினம். இதுக்கு என்னத்தைச் செய்யுறது.
ம். எனக்கேன் மற்றாக்களைப் பற்றிக் கவலை?
அம்மாவை நினைக்க ஓ அந்தத் தாயணில் தன்ர குட்டியணிலின்ர உடல் கூட்டை கடைசி வரையும் கண்டிருக்காது.
அது மாதிரி அம்மாவும்.

nantri-erimalai

தேங்காய்ச் சொட்டு சிறுகதை மிக மிக அருமையாக இருந்தது. எலிப்பொறியில் சிக்கிய அணிலும் சிறீலங்கா இராணுவத்திடம் சிக்கிய தமிழனும்- ந.மயூரரூபன் அதை எழுதிய விதம்- நிட்சயமாக அவர் அந்த அவஸ்தையை அனுபவித்துத்தான் எழுதியிருப்பாரோ என்று என்னைச் சிந்திக்க வைத்தது. வாசித்து வெகுநேரமாகியும் .. நாட்கள் நகர்ந்தும் மனசை விட்டகலாமல்.. இன்னும் என்னை என்னவோ செய்கிறது.

சந்திரவதனா. செல்வகுமாரன்
சுவாபிஸ்கால், ஜேர்மனி.

பிரசுரம் - எரிமலை(http://www.erimalai.com/2001-may/akkarai_pookkal.html)

Freitag, Oktober 31, 2003

பதிவுகளில் பிரசுரமாகியிருக்கும் சி. ஜெயபாரதனின்(கனடா) எமனுடன் சண்டையிட்ட பால்காரி! - சிறுகதை
ஒரு கற்பனைக் கதையானாலும் ஒரு வித நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான கதை.

Dienstag, September 09, 2003

சீதாக்கா -வ.ந.கிரிதரன்

பதிவுகள்.கொம் இல் வ.ந.கிரிதரன் அவர்களின் சீதா அக்கா கதையை வாசிக்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது. அவரது கதையில் யதார்த்தமும் எழுத்தோட்டத்தில் இயல்பான தன்மையும் எப்போதும் இருக்கும். அதனாலோ என்னவோ அவரது கதைகளை விரும்பி வாசிப்பேன். வாசித்த பின் அக்கதை மனதை ஏதாவது ஒரு வகையில் பாதித்திருக்கும். அப்படிப் பாதித்த கதைகளில் இந்த சீதாஅக்காவும் ஒன்று.

புலம் பெயர்ந்தாலும் புலன் பெயரவில்லை
1.
இன்னும் இருள் முழுதாக விலகியிருக்கவில்லை. இலையுதிர்காலம் தொடங்கி விட்டதால் இலேசாகக் குளிர் தொடங்கி விட்டிருந்தது. டொராண்டோ பஸ் நிலையத்தில் பயணிகளின் களை கட்டத் தொடங்கியிருந்தது. மான்ரியால் செல்லும் நண்பனை அனுப்பி விட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமான போதுதான் "மன்னிக்கவும். நீ சிறீலங்கா நாட்டவனா?" என்று ஆங்கிலத்தில் ஆண் குரல் கேட்கவே திரும்பினேன். எதிரே வெள்ளையினத்தைச் சேர்ந்த பஸ் டிரைவரொருவன் நின்றிருந்தான்.

"ஆம். நண்பனே. என்ன விடயம்" என்றேன்.

"நல்லதாகப் போய் விட்டது. நான் மான்ரியாலிருந்து வந்த பஸ் டிரைவர். என்னுடைய பஸ்ஸில் ஒரு சிறீலங்காத் தமிழ்ப் பெண்ணொருத்தி வந்திருக்கிறாள். அகதியாக வந்தவள். இங்கு அவளுக்கு யாரையுமே தெரியாது. உன்னால் முடிந்தால் உதவ முடியுமா?"

"தாராளாமாக "வென்றேன்.

"மிகவும் நன்றி நண்பனே!" என்றவன் பயணிகள் தங்கியிருக்கும் கூடத்திற்குச் சென்று சிறிது நேரத்தில் சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.

"நண்பனே! இந்தப் பெண்ணுக்குத் தான் உன் உதவி தேவை" என்றவாறு அழைத்து வந்த பெண்ணைப் பார்த்த எனக்கு வியப்புத் தாளவில்லை.

"சீதாக்கா" என்று கத்தியே விட்டேன்.

சீதா அக்காவுக்கும் என்னைக் கண்டதில் அளவிடமுடியாத வியப்புத் தான். எதிர்பாராத சந்திப்பல்லவா. மான்ரியால் பஸ் டிரைவருக்கு நன்றி கூறினேன். அவனும் " உனக்கு முன்பே இவளைத் தெரியுமா? நல்லதாகப் போய் விட்டது. எல்லாம் கடவுள் அருள்" என்று கூறி விட்டுச் சென்றான்.

"சீதாக்கா நம்பவே முடியவில்லையே! "யென்றேன்.

"எனக்கும் தான் மாது. பார்த்து எவ்வளவு நாளாச்சு " என்றாள் சீதாக்கா.

சீதாக்கா உண்மையிலேயே நல்ல வடிவு தான். அதிகாலையில் எழுந்து, கோலம் போட்டு. அருகிலிருக்கும் பிள்ளையார் கோயில் சென்று கோயில் ஐயருக்கு வேண்டிய உதவிகளெல்லாம் செய்து வருவதையெல்லாம் வியப்புத் ததும்ப பார்த்துக் கொண்டிருப்பேன். ஊரில் யாருக்கு என்ன உதவியென்றாலும் உதவி செய்யத்
தயங்காத உள்ளம் சீதாக்காவினுடையது. ஆண்பிள்ளையில்லாத குடும்பம். வயதான தாயையும் பார்த்துக் கொண்டு, ஊரிலிருந்த நெசவு சாலையில் வேலை பார்த்துக் கொண்டு, எந்தவிதமான சூழல்களையும் துணிவாக ஏற்றுக் கொண்டு வளையவரும் சீதாக்காவைப் பார்க்கும் போதெல்லாம் பெருமையாகவிருக்கும். சீதாக்காவுக்கு எப்பொழுதுமே துணை நான் தான். நூல் நிலையம் போகும்போது என்னைத் தான் எப்பொழுதும் கூட்டிச் செல்வாள். சீதாக்காவும் என் மூத்த அக்காவும் நல்ல சிநேகிதிகள். இருவருக்குமிடையில் நாவல்களைப் பரிமாறுவது நான் தான். கல்கி, விகடனில் வந்த தொடர்கதைகளை அழகாகக் கட்டி வைத்திருப்பாள். ஜெயகாந்தன், உமாசந்திரன், நா.பார்த்தசாரதி, அகிலன், கல்கி, ஜெகசிற்பியன் நாவல்களென்றால் சீதாக்காவுக்கு உயிர். ஆனால் ..சீதாக்கா பாவம். இவ்வளவு அழகிருந்தும், குணமிருந்தும் அவளுக்குக் கல்யாணம் மட்டும் ஆகவேயில்லை. இந்த ராஜகுமாரியைக் கூட்டிக் கொண்டு போக எந்த ராஜகுமாரன் வரப் போகின்றானோவென்றிருக்கும். நான் ஊரில் இருந்த வரையில் ஒரு ராஜ குமாரனுக்கும் அந்த அதிருஷ்ட்டம் வாய்த்திருக்கவில்லை. எண்பத்து மூன்று கலவரத்தைத் தொடர்ந்து நான் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன். அதன் பிறகு இப்பொழுதுதான் பத்து வருடங்கள் கழித்து சீதாக்காவைக் காண்கின்றேன்.

"சீதாக்கா நம்பவே முடியவில்லையே" என்றேன்.

"எனக்கும்தான் மாது. நம்பவே முடியவில்லை. நான் நம்புகிற கதிர்காமக் கந்தன் என்னைக் கை விடவில்லை" என்றாள் சீதாக்கா.

"சீதாக்கா எப்ப ஊரிலையிருந்து வந்தனீங்கள்"

"அது பெரியதொரு கதை. ஆறுதலாகச் சொல்லுகிறன். அது சரி நீ எப்ப கனடா வந்தனீ. ஜேர்மனியிலை நிற்கிறதாகவல்லவா கேள்விப்பட்டனான்"

"ஜேர்மனியிலைதான் இருந்தனான். போன வருஷம் தான் இங்காலை வந்திட்டேன். அங்கும் பிரச்சினைகள் தானே. நாங்களிருந்த இடத்திலை நாசிகளின்ற கரைச்சல் வேறு. மற்றது அங்கிருந்தால் 'பேப்பரும்' இலேசாகக் கிடைக்காது "

குடியுரிமைக்கான பத்திரங்களை 'பேப்பர்' என்றுதான் பொதுவாகக் கூறுவது வழக்கம்.

"இங்கே யாரோடை இருக்கிறாய் மாது"

"நானும் ஒரு நண்பனுமாக அபார்ட்மெண்ட் எடுத்து இருக்கிறம். கோப்பி ஏதாவது குடிக்கப் போறீங்களா சீதாக்கா"

இருவருமாக அருகிலிருந்த டோனட் கடையன்றுக்குச் சென்று காப்பி அருந்தி விட்டு எனது இருப்பிடம் நோக்கிப் பயணித்தோம். பாவம் சீதாக்கா. ஊரில் இருந்த போதெல்லாம அவளுக்கு ஏதாவது உதவிகள் செய்ய வேண்டெமென்று நினைப்பேன். ஆனால் அதற்கான வசதிகள் என்னிடமிருக்கவில்லை. ஆனால் இம்முறை எனக்கு அதற்கான வசதிகள் நிறையவேயிருக்கின்றன. சீதாக்காவுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டுமென மனதினுள் முடிவு செய்து கொண்டேன்.

'டொன்வலிப் பார்க்வே'யில் அதிகாலையென்ற படியால் வாகன நெரிச்சல் அவ்வளவாகவிருக்கவில்லை. மெல்லிய குளிர்காற்றில் விரைவதே சுகமாகவிருந்தது.

"சீதாக்கா நேராக ஊரிலிருந்தா வாறீங்கள்.."

"அது ஒரு பெரிய கதை. நானும் அவருமாக ஊரிலையிருந்து போன மாசம் ஒரு ஏஜெண்ட்டோடை வெளிக்கிட்டனாங்கள். அவரை சிங்கப்பூரிலை விமான நிலையத்திலை நிற்பாட்டிப் போட்டாங்கள். இனி இங்கையிருந்து கொண்டு தான் அவரைக் கூப்பிட முயற்சி செய்ய வேண்டும்"

என்ன! சீதாக்காவுக்குக் கல்யாணம் ஆகி விட்டதா? நிம்மதியாகவிருந்தது.

"சீதாக்கா எப்ப உங்களுக்குக் கல்யாணம் நடந்தது? எனக்குத் தெரியாதே."

"போன வருஷம் தான். அவர் எங்கள் ஊர்ப் பள்ளிக்கூடத்திலை வாத்தியாராகவிருந்தவர். வெளியூர்க்காரர். எங்களுடைய வீட்டிலைதான் சாப்பாடு. அப்ப ஏற்பட்ட பழக்கம் தான். நல்ல மனுஷண்டா மாது"

சீதாக்காவின் முகத்தில் வெட்கத்தின் சாயை படிந்தது.

"ஒன்றுக்கும் கவலைப் படாதையக்கா. எப்படியாவது அவரை இங்கே கூட்டி வந்து விடலாம்"

என்று சீதாக்காவுக்கு ஆறுதல் கூறியபொழுது மனதினுள் எப்படியாவது இம்முறை சீதாக்காவுக்கு உதவி செய்ய வேண்டுமென முடிவு செய்து கொண்டேன். அவளுக்குத் திருமணம் செய்து வைக்க உதவ வேண்டுமென எண்ணியதுண்டு. அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ அவளை அவளுடைய கணவனுடன் சேர்த்து வைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. கட்டாயம் என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.

2.
"சீதாக்கா, இவன் தான் என் 'ரூம்மேட்' சபாபதி. உன்னை மாதிரித்தான் சரியான சாமி பைத்தியம். சபா! சீதாக்கா எங்களுடைய ஊர் தான். பஸ் டேர்மினலிலை தான் சந்தித்தனான். கொஞ்ச காலத்திற்கு எங்களுடன் தான் தங்கப் போகின்றா"

"ஹலோ. உங்களைப் பற்றி இவன் அடிக்கடி கதைப்பான் "

சபாபதிக்கும் சீதாக்காவுக்கும் உடனடியாகவே ஒத்துப் போய் விட்டது.

"மாது! உனக்கு நல்லதொரு நண்பன் வாய்த்திருக்கிறான்" என்று மனம் நிறைந்து பாராட்டினாள்.

சீதாக்கா வந்ததிலிருந்து எங்களுடைய அபார்ட்மெண்ட்டின் கோலமே மாறி விட்டது. அதுவரையில் பிரம்மச்சாரிகளுக்குரிய வகையில் அலங்கோலமாகக் கிடந்த அப்பார்ட்மெண்ட் தலைகீழாக மாறி விட்டது. அபார்ட்மென்டிற்கே ஒருவித வடிவும் ஒழுங்கும் வந்து விட்டது. அதிகாலையிலேயே எழுந்து விடும் சீதாக்கா டேப்பில் எம்.எஸ்.சின் சுப்ரபாதத்தினைப் போட்டு விடுவாள். குளித்து விட்டு எந்த வித விகல்பமுமில்லாமல் குறுக்குக் கட்டுடனேயே உலராத கூந்தல் தோள்களில் புரண்டபடியிருக்க அபார்ட்மெண்ட் முழுக்க சாம்பிராணி புகையை பரப்பி விடுவாள். அதுவரை அழுது வடிந்து கொண்டிருந்த அபார்ட்மெண்ட்டிற்கே ஒருவித லக்சுமிகரக் களை வந்து விட்டது. என்னைவிடச் சபாபதிக்குத் தான் சரியான சந்தோசம். தன்னைப் போலொரு சரியான சாமிப் பைத்தியம் வந்து விட்ட மகிழ்ச்சி அவனுக்கு.

நான் சீதாக்காவை இங்கு அனுப்பிய முகவருடன் தொடர்பு கொண்டு அவளுடைய கணவர் பற்றிய தகவல்களைப் பெறு முயன்றேன். அதில் வெற்றியும் கண்டேன். அவளது கணவன் இன்னும் தன்னுடைய பராமரிப்பில் தான் இருப்பதாகவும், அவனை எப்படியும் கனடா அனுப்புவது தனது கடமையென்றும் அவன் உறுதி தந்தான். சீதாக்காவையும் அவளது கணவனுடன் கதைப்பதற்கு ஒழுங்குகள் செய்தான்.

"இஞ்சேருங்க! நீங்க ஒன்றுக்கும் கவலைப் படாதையுங்கோ. நான் சொல்லுவேனே மாது. அவனும் இங்கு தான் இருக்கிறான். அவனுடன் தான் தங்கியிருக்கிறன். நான் நம்பியிருக்கிற கதிர்காமக் கந்தன் என்னைக் கை விடேல்லை. உங்களையும் கெதியிலை கொண்டு வந்து சேர்த்து விடுவான். மாது. அவர் உன்னோடையும் கொஞ்சம் பேச வேண்டுமாம்"

என்று தொலைபேசியைத் தந்தாள் சீதாக்கா.

"மாது! மெத்தப் பெரிய நன்றி. நீங்க செய்த உதவியை மறக்க மாட்டோம்" என்று அவளது கணவன் மன நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தான்.

"நீங்கள் ஒன்றுக்கும் கவலைப் படாதீங்கோ அங்கிள். எப்படியும் கெதியிலை இங்கை வந்து விடுவீங்கள். சீதாக்காவைப் பற்றிக் கவலையே பட வேண்டாம்" என்று அவருக்கு உறுதியளித்தேன்.

3.
நாட்கள் சில விரைவாக சென்று மறைந்தன. மாதங்கள் சிலவும் கடந்து சென்றன. சீதாக்காவின் கணவர் விடயத்தில் இன்னும் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இரண்டாம் முறையும் ஏதோ தடங்கல். சீதாக்கா முகத்திலும் சில வேளைகளில் கவலை படரத் தொடங்கியது.
"சீதாக்கா! ஒன்றுக்கும் கவலைப் படாதீங்கோ. எப்படியும் அவர் கெதியிலை வந்து விடுவார்" என்று ஆறுதல் கூறினேன்.

ஏன் தான் கடவுள் சீதாக்காவை இப்படிப் போட்டுச் சோதிக்கின்றாரோ என்றிருக்கும். இதற்கிடையில் எனக்கும் ஊரில் திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து முடிந்திருந்தன. பெண்ணைப் பார்ப்பதற்காக என்னைக் கொழும்பு விரைவில் வரும்படி அக்கா கடிதம் போட்டிருந்தா. கனடா மாப்பிள்ளையென்றபடியால் கொழுத்த சீதனாமாம். பெட்டையும் நல்ல வடிவாம். சிவப்பாய் தக்காளிப்பழம் மாதிரி. தமிழ்த் திரைப்படக் கதாநாயகர்கள் மாதிரி கனவுகளில் மிதக்க ஆரம்பித்தேன். இவ்விதமாக நாட்கள் சென்று கொண்டிருந்த சமயத்தில் தான் நான் சபாபதியிலேற்பட்டிருந்த மாற்றத்தினை அவதானிக்கத் தொடங்கினேன். அடிக்கடி ஊற் சுற்றிக் கொண்டிருந்தவன் இப்பொழுதெல்லாம் அநேகமாக அப்பார்ட்மென்டே கதியாகக் கிடக்கத் தொடங்கினான். அதிகாலையே சீதாக்காவுடன் சேர்ந்து எழுந்து விடத் தொடங்கினான். குறுக்குக் கட்டுடன் சாம்பிராணித் தட்டுடன் வரும் சீதாக்காவின் மேல் அவனது கண்கள் இரகசியமாக மேயத் தொடங்கியதைத் தற்செயலாக அவதானித்தேன். ஓரிரவு வீடு அபார்ட்மெண்ட் திரும்பிய பொழுது வீடியோவில் தமிழ்த் திரைப்படமொன்று ஓடிக் கொண்டிருந்தது. சீதாக்கா சோபாவில் சாய்ந்து நித்திரையாகிக் கிடந்தாள். படம் பார்த்துக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கிப் போயிருக்க வேண்டும். அவளது சேலை கூட இலேசாகி மார்பிலிருந்து விலகிக் கிடந்தது. இதனை உணராமல் தூங்கிக் கிடந்தவளை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த் சபாபதி என்னை கண்டதும் சிறிது திகைத்தவனாகத் தனது பார்வையினை மாற்றினான். எனக்கு முதல் முறையாகக் கவலையேற் பட்டது. சீதாக்காவுக்கு இவனாலேதாவது மனக் கஷ்ட்டங்களேற்பட்டு விடக் கூடாதேயென்று மனம் தவித்தது. சபாபதி நல்லவன்.ஆனாலும் பருவக் கோளாறு. தவறிழைக்க மாட்டானென்று பட்டது. ஆனால் ..எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? சீதாக்காவை அவளது கணவருடன் சேர்த்து வைக்கும் மட்டும் அவளைப் பாதுகாத்து வைக்க வேண்டுமேயென்று மனது கிடந்து அடித்துக் கொண்டது.
இதற்கெல்லாம் முடிவு....சபாபதியை வெளியே அனுப்புவது தான். இவன் என் நீண்ட கால நண்பனல்லவே, கனடாவிற்கு வந்த இடத்தில் அறிமுகமானவன் தானே. ஒரு நாள் அவனைத் தனியாக அழைத்துக் கொண்டு அருகிலிருந்த டோனட் கடைக்குச் சென்றேன்.

"இங்கை பார் சபா. உன்னோடைத் தனியாக ஒரு விசயம் பேச வேண்டும்"

'என்ன? ' என்பது போல் அவன் என்னை நோக்கினான்.
"இஞ்சை பார் சபா. நான் சுத்தி வளைக்க விரும்பவில்லை. இனியும் நீ என்னுடன் இருப்பதை நான் விரும்பவில்லை. சீதாக்கா போகும் மட்டுமாவது நீ என்னுடனிருப்பதை நான் விரும்பவில்லை. உனக்கு விளங்குமென்று நினைக்கிறேன். இந்த அபார்ட்மெண்டுக்கு நீ வரும் போதே ஒரு மாதம் நிற்கிறனென்று தான் நீ வந்தனீ. நானும் விரைவிலை கல்யாணம் செய்யவிருக்கிறன். அதன் பிறகு என்னுடைய மனுசியும் வந்து விடுவாள். நீ வேறை அபார்ட்மெண்ட் பார்க்கிறது நல்லது..."

சபாபதி இதற்கேதும் மறுப்புத் தெரிவிக்காதது எனக்கு ஆச்சர்யமாகவிருந்தது. அடுத்த வாரமே அவன் இடம் மாறி விட்டான். சீதாக்காவுக்குக் கூட வியப்பாகவிருந்தது. "ஏன் கெதியிலை மாறிவிட்டான். உங்களுக்கிடையிலை ஏதாவது பிரச்சினையோ?' என்று கேட்டாள்.

4.
சபாபதியின் அமைதிக்கான காரணம் விரைவிலேயே விளங்கி விட்டது. அபார்ட்மெண்ட் மாறிய வேகத்திலேயே அவன் எனக்கும் சீதாக்காவுக்குமிடையில் தொடர்பு இருப்பதாக கதையினைப் பரப்பி விட்டான். நான் இதனைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இவன் இவ்வளவு நஞ்சு மனம் கொண்டவனாக இருப்பானென்று நான் கனவில் கூட நினைத்திருக்கவில்லை. எனக்கு என்னைப் பற்றிக் கவலையேதுமில்லை.ஆனால் இவற்றால் சீதாக்காவுக்கு ஏதாவது பிரச்சினைகளேதாவது வந்து விடக் கூடாதேயென்று மனம் கிடந்து தவித்துக் கொண்டது. இதற்கு என்ன செய்யலாமென்று மூளையைப் போட்டுக் குடைந்தது தான் மிச்சம். இதற்கிடையில் இதன் முதலாவது விளைவாக அக்காவின் கடிதம் வந்திருந்தது.

" தம்பி, உனக்குப் பேசிய கல்யாணம் முறிந்து விட்டது. உனக்கும் எங்களுடைய சீதாக்காவுக்கும் தொடர்பாமென்று யாரோ கதை கட்டி விட்டிருக்கிறாங்கள் போலை. அவங்களுடைய காதுகளுக்கும் அந்தக் கதை போய் விட்டது. இந்தச் சம்மந்தம் வேண்டாமென்றிட்டாங்கள். நான் சொல்லுறனென்று குறை நினைக்கதையடா. பனை மரத்தினடியில் நின்று பால் குடிச்சாலும் கள்ளு குடிக்கிறதாத் தானிந்த உலகம் சொல்லும். உன்னை எனக்குத் தெரியும். சீதாவை எனக்குத் தெரியும். ஆன இந்த உலகத்துக்கு இதெல்லாம் விளங்கவாப் போகுது. நீ சீதாவுக்குத் தனியாக அபார்ட்மெண்ட் பார்த்து வைக்கிறதுதான் உனக்கும் நல்லது. அவவுக்கும் நல்லது. அவளின்ற புருசனுக்கும் இந்தக் கதை போய் ஏதாவது பிரச்சினை வரக் கூடாது பார்"

இவ்விதம் எழுதியிருந்தாள். எனக்குக் கவலை கவலையாகவிருந்தது. சீதாக்காவை நினைத்தால் தான் பாவமாயிருக்கு. பாழாய்ப்போன் சீதனப் பிரச்சினையால் தள்ளிப் போய்க்கொண்டிருந்த அவளுடைய நல்ல காலம் அவளைப் புரிந்து கொண்ட ஒரு இராமன் அவளுக்குக் கிடைத்திருக்கிறான். சீதாப் பிராட்டியையே இந்தப் பாழாய்ப் போன் ஊர் விட்டு வைக்கவில்லையே. அக்கினி குளிக்கவல்லவா வைத்து விட்டது. பாவம் சீதாக்கா. இவளை மட்டும் சும்மா வைத்து விடுமா?

5.
அன்று வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது ஒரு முடிவுடன் வந்து கொண்டிருந்தேன். என்னுடன் வங்கியில் வேலை பார்க்கும் சக நண்பியான யோகமாலா அவளும் தாயுமாகத் தான் அண்மையில் வாங்கிய 'கொண்டோ'விலையிருக்கிறாள். அவளுடன் இப்பிரச்சினை பற்றிக் கதைத்ததில் அவள் சீதாக்காவை அவள் கணவர் வரும் மட்டும் தன்னுடன் வந்து தங்கியிருக்க உதவுதாக உறுதியளித்தாள். அதற்குப் பதிலாக என்னால் முடிந்த அளவுக்கு அவளுக்கு வாடகை தருவதாக நானும் உறுதியளித்தேன். இது பற்றி சீதாக்காவுடன் கதைக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். எப்படித் தொடங்குவது என்பது தான் தெரியவில்லை. ஒரு களங்கமில்லாத நட்புக்குக் கூடக் களங்கம் கற்பித்து விடுகின்றதே இந்த உலகம். ஊரில் தான் பிரச்சினை என்று வந்தால் இங்கும் நாட்டு நிலைமகளால் ஓடி வந்த சீதாக்காவுக்கு உதவக் கூட முடியாமலிருக்கிறதே.

அபார்ட்மெண்ட் வந்த எனக்கு முதலில் அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக வந்து கதவைத் திறக்கும் சீதாக்காவைக் காணவில்லை. அபார்ட்மெண்ட் இருளில் மூழ்கிக் கிடந்தது.

லைற்றைப் போட்டேன். சீதாக்காவைக் ஓரிடத்திலும் காணவில்லை. அப்பொழுதுதான் மேசையில் விரித்து வைக்கப் பட்டிருந்த கடிதத்தினை அவதானித்தேன். அவசரமாக எடுத்துப் பிரித்தேன்.
சீதாக்கா தான் எழுதியிருந்தாள்.

"மாதவா! நான் இப்படி சொல்லிக் கொள்ளாமல் போவதற்காகக் கோபிக்க மாட்டாயென்று நினைக்கிறேன். இன்று என்னுடைய கணவர் சிங்கப்பூரிலிருந்து போன் பண்ணியிருந்தார். அப்பொழுதுதான் உன்னையும் என்னையும் சேர்த்துக் கதை கட்டியிருந்த விசயம் பற்றிக் கூறினார். அவரது கவலையெல்லாம் உன்னைப் பற்றித் தான். அவருக்கு என்னைப் பற்றி நல்லாத் தெரியும். இந்தக் கதைகளைப் பற்றியெல்லாம் கவலைப் பட மாட்டார். எனக்கு இப்பிடியரு நல்ல புருசன் கிடைத்தது கதிர்காமக் கந்தனின்ர அருளால் தான். உன்னுடைய அக்காவும் இன்று பகல் போன் பண்ணியிருந்தா. அப்பத் தான் எனக்கு உன் கல்யாணம் நின்ற விசயமே தெரியும். நான் இங்குள்ள சுப்பர்மார்க்கட்டிலை அடிக்கடி சந்திக்கிற மட்டக்களப்புப் பெட்டையன்று தனியாத் தான் அபார்ட்மெண்ட் எடுத்துத் தங்கியிருக்கிறா. அவ ஒவ்வொரு முறை சந்திக்கிற போதும் தன்னுடன் வந்து விடும்படி கேட்கிறவ. அவவுடன் போவதாக முடிவு செய்து விட்டேன். என்னாலை உனக்கு வீணாகப் பிரச்சினைகளேதாவது வந்து விடக் கூடாது பார். உன்னுடன் நேரிலை இதை கூற எனக்குத் துணிவில்லை. அதுதான் கூறாமலே போகின்றேன். நான் உனக்குப் பிறகு ஆறுதலாகப் போன் எடுக்கிறேன்...இப்படிக்கு... சீதாக்கா" என்றிருந்தது.

தொப்பென்று சோபாவில் போய்ச் சாய்ந்தேன். ஊரில் இருந்த மட்டும் ஒரு ராஜகுமாரி போல் வளைய வந்து கொண்டிருந்த சீதாக்காவுக்கு உதவ முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கும். அன்னிய நாட்டிலாவாது ஒரு சந்தர்ப்பம் வந்ததேயென்று சந்தோசப் பட்டால் அதற்கும் கொடுத்து வைக்கவில்லையேயென்று கவலையாகவிருந்தது. நாட்டு நிலைமைகளால் உறவுகள் பிரிபட்ட நிலையில் வந்திருந்த சீதாக்காவுக்கு உதவுதற்குக் கூட இந்தப் பாழாய்ப்போன சமுதாயம் விட்டு வைக்க மாட்டெனென்கிறதே. எத்தனை நாட்டுக்குத் தான் புலம் பெயர்ந்து போயென்ன? புலன் பெயர்ந்தோமா?

நன்றி: பதிவுகள்

Montag, August 11, 2003

மகாநதி - திரைப் படத்திலிருந்து

நான் கங்கா நதியைக் காணும் போது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது
இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது!!!!

Freitag, August 08, 2003

மகாநதி - திரைப் படத்திலிருந்து

பிறர் பாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக் கிரையென பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?