Mittwoch, Juni 30, 2004

கர்நாடக இசை பாடும் ஆப்பிரிக்க குயில்


பேட்ரிக் வீட்டை ஜேசுதாஸின் படங்களே நிரப்புகின்றன.

மணிக்கணக்கில் சம்மணம் இட்டு உட்காருவதுகூட எனக்கு ஒரு சவால்தான் - பேட்ரிக் இன்கோபோ

கர்நாடக இசைபாடும் உலகின் முதல் கறுப்பு ஆப்ரிக்கர் பேட்ரிக் என்கோபோ தென்னிந்திய இசையில் காட்டும் ஆர்வமும் அதில் அவருக்குள்ள திறமையும் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கின்றன.

ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் மொழியும் இனமும் இசை பயில தடையாகாது என்பதை நிரூபித்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் 'ஸுலு' பழங்குடியினத்தை சேர்ந்த இந்த 34 வயது கறுப்புக் குயில்.

பிரபல தென்னிந்திய பாடகர் ஜேசுதாசின் பாடல் ஒன்றை கேட்டு மயங்கிய பேட்ரிக், கிறங்கவைக்கும் அந்த இசையை தானும் கற்கவேண்டும் என்று உறுதிபூண்டார்
அதிர்ஷ்டக் காற்று தன் பக்கம் அடிக்க, தென்னாப்பிரிக்காவுக்கு கச்சேரிக்காக வந்த ஜேசுதாசிடம் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி, சென்னை வந்தால் தன்னிடம் இசை பயிலலாம் என்று ஒப்புதலை பெற்றார்.

வறுமையால் வாடிய நிலையிலும், போராடிப் பணம் சேர்த்து சென்னையில் வந்திறங்கிய பேட்ரிக், குருகுலவாசம் போல ஜேசுதாசின் வீட்டிலேயே தங்கி பயிற்சி செய்து தனது இசையார்வத்திற்கு தீனி போட்டு வந்தார்.

பல்வேறு கஷ்டங்களுக்கு நடுவிலும் மூன்று ஆண்டுகள் சென்னையில் கர்நாடக இசையை பயின்று தேறினார் பேட்ரிக்.

கர்நாடக இசையை கற்றுப் பாடுவதற்கு வருடக் கணக்கில் கடும் உழைப்பும். பொறுமையும் தேவை. வெளிநாட்டவரான பேட்ரிக்குக்கு மொழியும் ஒரு தடை. ஆனால் அத்தடைகள் எல்லாவற்றையும் தாண்டி அவரால் சரியான உச்சரிப்புடன் ஏழு இந்திய மொழிகளில் பாட முடிகிறது.
பேட்ரிக் தமிழ் ஆல்பம்

இது தவிர தானாகவே 'ஸுலு' மொழியில் பாட்டெழுதி இந்திய ராகங்களில் மெட்டமைத்து பாடி தென்னாப்பிரிக்க ரசிகர்களையும் கவரக்கூடியவர் இவர்.

பேட்ரிக் பற்றி தமிழோசைக்கு கருத்து சொல்லிய பாடகர் ஜேசுதாஸ், அவரை மிகச் சிறந்த மாணவனாக மெச்சினார். எவ்வளவு தடையிருந்தாலும் விடாமுயற்சி ஒரு மனிதனை எங்கு இட்டுச் செல்லும் என்பதற்கு பேட்ரிக் ஒரு உதாரணம்

ஜேசுதாஸ்

எவ்வளவு தடையிருந்தாலும் விடாமுயற்சி ஒரு மனிதனை எங்கு இட்டுச் செல்லும் என்பதற்கு பேட்ரிக் ஒரு உதாரணம் - ஜேசுதாஸ்

கர்நாடக இசையின் பெருமையை உலகறியச் செய்வதே தனது கனவு என்று கூறுகிறார் பேட்ரிக் என்கோபோ.

Quelle - BBC TAMIL.com