நான்: (ஒஸ்லோவில்)
நான்தான்....
விநாயகமூர்த்தி!
பெயருக்கேற்றாற் போல்தான்
கட்டைப் பிரமச்சாரி.
வயது நாற்பதைத் தொட்டாயிற்று
வழுக்கை விழுந்ததுதம் வசதிதான்
வெள்ளி முடிகள் வெளிப்படவில்லை.
ஒற்றை அறை வாழ்வு.
இண்டைக்கும் "ஓவர்ரைம்" தான்
பாரிய சலவைத் தொழிலகம்
முழங்காலும் மூட்டுக்களும் வலிக்கின்றது
இனிப் போய் சமைக்க முடியாது
நல்ல வேளை - குளிர்ப்பெட்டியில்
பலநாளாய் பாதுகாக்கப்பட்ட
பருப்புக்கறியும் கோழிக்கறியும்
பசியாற்றப் பயன்படும்.
அவர்கள்: (கொழும்பில்)
அம்மாவும்
அத்தானை இழந்த அக்காவும்
அவள் பிள்ளைகளும்
தங்கச்சிமார் இருவரும்
எல்லாரும் என்னை நம்பித்தான்
வசதியான வீடு
வாழ்வை மீறிய வசதிகள்
புதிய காலை ஒவ்வொன்றிலும்
புத்தம் புதிதாய்
மரக்கறிகளும் மாமிசமும்
முதல்நாள் மீதமானதை
மறுநாள் உண்ண முடியாதாம்
சமையலுக்கு மாத்திரமல்ல
சலவை செய்திடக்கூட
சம்பளத்திற்கு ஒருத்தி
வந்து வந்து போகின்றாள்
பிகு: நேற்றும்.....
நிமிடங்களைத் தின்னும்
தொலைபேசி அட்டையொன்றோடு சமர்
பகீரதப் பிரயத்தனமாய்
பலமுறை முயன்று
தொடர்பு கிடைத்தபோது
"அண்ணாமலை தொடர் பார்க்கிறம் ராசா
ஆறுதலாய் எடு....."
அவசரமாய்த் தொடர்பைத் துண்டித்தாள் அம்மா!
சோதியா - Norway
nantri - yarl.com