ஏற்கனவே பாலியல் வன்முறை பற்றி ஒரு கதை எழுதவேண்டும் என்று வெகுகாலமாக நினைத்திருந்தேன். இப்போது வரிசையாக என்னைத்தூண்டும் வண்ணம் சம்பவங்கள் நடந்துவருகின்றன. தற்காலப்பெண்பாற்கவிஞர்கள் தங்கள் பாலுறுப்புப்பற்றி எழுதுவது பற்றிய இழையில் மதுரபாரதி, யோனி என்கிற வார்த்தையை பயன்படுத்தாமல் எழுத இயலாத இந்த ஆங்கிலக் கதையைப்பற்றி குறிப்பிட்டார்.
பின்னர் உள்ளூர் தொலைக்காட்சியில் "பதின்ம வயதினரின் பாலியல் பிரச்சனைகளை பெற்றோர்கள் சமாளிக்கும் விதம்" எனும் பயிற்சிப்பட்டறை குறித்த விளம்பரம் பார்த்தேன். இரண்டு நாட்களில் வெவ்வேறு சமூகக்கூடங்களில் நடைபெற்ற அந்நிகழ்சியின் முதல் நாள் ஏற்கனவே கடந்துவிட்டது. இரண்டாம் நாளான ஞாயிறு அன்று நான் நேரில் கண்டதும் கேட்டதும் உணர்ந்ததும் கீழே தொகுத்திருக்கிறேன்.
முதலில் உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியான 'குரு பார்வை' எனும் தொடரிலிருந்து பட்டறைக்கு தொடர்புடைய காட்சித்தொகுப்பு திரையிடப்பட்டது. அந்ததொடரை நான் ஏற்கனவே சிலவாரங்கள் பார்த்திருக்கிறேன், ஆசிரியர் மாணவர் உறவில் எழக்கூடிய சிக்கல்களை வெகு அழகாக படம்பிடித்திருக்கிறார்கள்.
கட்டுப்பாடற்ற பதின்ம வயதுப்பெண் இணையத்தில் முகந்தெரியாத நபருடன் அளவளாவி நேரில் சென்று சிக்குதல், இளையர்களுக்கிடையே ஏற்படும் தகராறுகள் போன்ற விஷயங்கள் திரையிலோடின. இதில் நடித்தவர்களும் நேரில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
இளையர்கள் சில நிகழ்வுகளை மேடையில் நடித்துக்காட்டினர், இரண்டு மூத்த(அகவை அல்ல!) சமூக சேவகிகள் நிகழ்ச்சியை வழிநடத்தினர். அதிக ஆங்கிலமும் கொஞ்சம் தமிழும் கலந்து படைக்கப்பட்ட நிகழ்சியில் வலியுறுத்தப்பட்ட கருத்தின் சாரம் பின்வருமாறு
பெற்றோர்களுக்கான அறிவுரைகள்:
நம் பதின்ம வயதுப்பிள்ளைகளுடன் உறுதியான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுதல்
- உங்கள் குழந்தைகள் வாழும் உலகை தெரிந்துகொள்ளுங்கள், அவர்கள் என்ன அழுத்தம் உணர்கிறார்கள்? எதை அவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்? நாம் அவர்களின் செயல்களிலும், நண்பர்களிடமும் ஆர்வம் காட்டினால், அவர்கள் நம் அக்கறையையும், அவர்கள் வாழ்வில் நம் பங்கையும் உணர்வார்கள்.
- நல்ல உதாரணங்களை ஏற்படுத்தி, நன்மதிப்பு எவ்வாறு நம் வாழ்வை செழிப்பாக்குகிறது என்று உணர்த்துங்கள்.
- பிள்ளைகளின் உதவிக்கும் தேவைக்கும் நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துங்கள், நம் யோசனைகளையும் கருத்துக்களையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
- அவர்கள் உங்களை கேட்காவிடிலும் நீங்கள் அவர்களை கேள்வி கேளுங்கள், அவர்கள் என்ன யோசிக்கிறார்கள் அவர்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது என்பது குறித்து கேளுங்கள்.
- அறிவுரை சொல்ல வாய்க்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு நண்பரின் கர்பம், உலவும் வதந்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவை உங்கள் பேச்சை துவங்க உதவலாம்.
- உங்கள் உணர்வுகளிலும் மதிப்பீடுகளிலும் தெளிவாக இருங்கள். பதின்மவயது பிள்ளைகளிடம் பேசும் முன்பே, என்ன பேசவேண்டும் என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள். நம் துணை(வர்/வி), நண்பர், அல்லது நம் நம்பிக்கைக்குரிய நபரிடம் இது குறித்து உரையாடுவது நம் சேதியை தெளிவாக்கிக்கொள்ள உதவும். அது பிள்ளைகளிடம் பேசுவதற்கு தேவைப்படும் நம்பிக்கையையும் வழங்கும்.
கவனிக்க வேண்டியவை:
- உங்கள் பிள்ளைகளின் தன்மதிப்பை வளர்த்துவிடுங்கள். அவர்களின் திறமைகள், குணாதிசயங்கள், சாதனை ஆகியவற்றுக்கு மதிப்புக்கொடுங்கள்.
- அவர்கள் இயல்பாகவே இருப்பதை மறு உறுதிப்படுத்துங்கள்.
- நம்முடைய உடலசைவுகள், முகபாவனை, நயம், குரல் ஆகியவை நாம் சொல்லும் சொல்லுக்கு துணை நிற்கட்டும்.
- தெளிவான, நேர்மையான, சுலபமாக புரியக்கூடிய சிறிய பதில்களை அளியுங்கள்.
- பகிர்ந்துகொள்ளும்போது காட்சிகளையும் நிறங்களையும் பயன்படுத்துங்கள்.
- அவர்களின் தவறுகளை கற்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்துங்கள். குறைகூறுவது, திட்டுவது, புத்திமதி கூறுவது, கத்துவது இவை அவர்கள் கற்க உதவாது.
பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க உதவும் குறிப்புகள்:
- கேள்விகளை உள்ளர்த்தம் கற்பிக்காது ஏற்றுக்கொள்ளுங்கள், உதாரணத்துக்கு 'எத்தனை வயதில் பாலியல் உறவுகொள்ளமுடியும்?' என்ற கேள்விக்கு 'நான் உடலுறவு கொள்வது பற்றி சிந்திக்கிறேன், அதற்கு என்ன செய்யவேண்டும்?' என்று அர்த்தமல்ல, பாலியல் பற்றிய கேள்விகள் பெரும்பாலும் குடும்பத்தின் மதிப்பை உணரவே முயற்சிக்கின்றன.
- இது குறித்து பேசுவது சங்கடமாக இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.
- பாலுறுப்புகள், பாலியல் ரீதியான செயல்கள் ஆகியவற்றை அவற்றின் சரியான பெயர்களால் குறிப்பிடுங்கள். சங்கடமாக இருந்தால் அப்பெயர்களை உரக்க சொல்லி அல்லது கண்ணாடி முன் சொல்லி பழகுங்கள் (சொந்த எச்சரிக்கை: உரக்கச்சொல்வது என்றால் பக்கத்து வீட்டுக்காரருக்கு கேட்குமளவு உரத்து அல்ல, கண்ணாடி முன் சொல்லும்போதும் கேட்கும் தூரத்தில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் அல்லது உங்களின் மறுபாதியிடம் முன்பே செய்யப்போவதை சொல்லி விடுங்கள் இல்லாவிட்டால் அதி தர்மசங்கடமான நிலை ஏற்படலாம்)
- கேட்கப்பட்ட கேள்விக்கு விடை தெரியாது என்றால் ஒப்புக்கொள்ளுங்கள், பின்னர் அவர்களுக்கு விடையை புத்தகத்திலோ வேறு வகையிலோ தேட நாமே உதவலாம்.
- எல்லா விபரங்களையும் ஒரே நேரத்தில் வழங்கவேண்டியதில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.
- அவர்களின் அந்தரங்கத்தையும் நம்முடையதைப்போலவே மதியுங்கள். தேவைக்கதிகமாக மூக்கை நுழைக்காதீர்கள்
மற்றபடி (அனைவரும் பகிர்ந்துகொண்ட கருத்துகளின் தொகுப்பு)
- இணைய இணைப்பு உள்ள கணினியை தனிமையற்ற, கண்காணிக்க உகந்த கூடம் போன்ற இடங்களில் வைத்துவிடுவது உத்தமம்.
- உங்களின் ஒழுக்கததைப்பேணுங்கள், நடு இரவில் தந்தை பார்க்கும் நீலப்படம் மூலமாக தூண்டப்பட்ட குழந்தைகள் உண்டு
- பதின்ம வயதினரிடம் நிறைய சக்தி இருக்கிறது, அவற்றை செலவழிக்க உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளைக்கொடுங்கள் அவர்களை நடனம், விளையாட்டு முதலியவற்றில் ஈடுபடத்தூண்டுங்கள். வேலையில்லாதவன் மூளை சாத்தானின் பட்டறை.
- பதின்ம வயதினரை அதி நவீன ஆடை அலங்காரப்பிரியர்கள்(இதிலே பல குழுக்கள் உண்டு),அடங்காதவர்கள், படிப்பாளிகள் என்று பிரிவுகளாக பிரிக்கலாம். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது, படிப்பாளிகள் கண்டதையும் படிக்கவும் வாய்ப்பு இருக்கிறது
- அழகான/களையான எதிர் பாலரைப்பார்க்கும் போது மனதுக்குள்ளாவது ஒரு விமரசனம் வரவேண்டும் அப்போதுதான் இயல்பாக இருப்பதாக அர்த்தம் (இதுவும் அடுத்த மூன்று கருத்துக்களும் மருத்துவ ஆலோசகருடைது)
- சுய தீண்டல், ஈரக்கனவு போன்றவை இயல்பானது, அதன் அளவை மீறினால்தான் ஆபத்து
- தன்னுடைய பாலுறுப்பில் அடிக்கடி கையை வைத்திருப்பவர்கள் எல்லோரும் சுயதீண்டல் தான் செய்கிறார்கள் என்று அர்த்தமல்ல, சிலருக்கு அங்கே ஏற்பட்டுள்ள வியாதியும் அதனால் ஏற்படும் அரிப்பும் காரணமாக இருந்திருக்கிறது
- ஒரு பன்னிரண்டு வயதுப்பெண் கர்ப்பமானது தெரியாமலே ஆனால், ஆறுமாத கர்பத்துடன் சொன்னாள் "டாக்டர் என் வயித்துக்குள்ள ஃபுட்பால் இருக்கு". இப்படியும் இருக்கிறார்கள்
- இந்த பாலியல் விவகாரமெல்லாம் என் குழந்தைக்கு தேவையில்லை என்று விட்டுவிடாதீர்கள் நீங்கள் சொல்லாததால் அவர்களுக்கு தெரியாமல் போகாது, நீங்களே சொன்னால் தவறான தகவல்கள் அவர்களுக்கு கிடைப்பதை தடுக்கலாம்
- என்னுடைய நண்பன் விந்து வெளியாவதற்கு முன்பே வெளியே வெளியே எடுத்துவிடுகிறான் அதனால் நான் கர்ப்பமாகமாட்டேன் என்று நினைப்பது தவறு ஏனெனில் நாம் உணராமலே, அடையாளம் இல்லாமலே, முன்னரே விந்து உட்செல்ல வாய்ப்பு இருக்கிறது.
- முதல் முதலாக உடலுறவு கொள்ளும்போது கர்ப்பமாகாது என்பதும் உண்மையல்ல.
- கர்பத்தை தவிர்க்க உபயோகிக்கும் ஆணுறை போன்ற சாதனங்கள், மாத்திரைகள் நூறு சதம் பலனளிக்கும் என்று கூறமுடியாது. பல சந்தர்ப்பக்களில் அவற்றின் தோல்வி நிறுபணமாகியுள்ளது.
- சந்தர்ப்பங்களில் எதிர் பாலர் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆயுதம், "நீ என்னை விரும்புவது உண்மையானால் இதற்கு சம்மதி", "நான் உன்னோடு மட்டுமே உறவு வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்", "நாம் அனைவரும் நண்பர்கள் நம்முள் இந்தமாதிரி தேவையற்ற தயக்கங்களும் ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது", இது போன்ற உணர்வுப்பூர்வமான அச்சுறுத்துதல்களுக்கு எப்படி மயங்காமல்/தயங்காமல் பதிலளிப்பது என்று அவர்களுக்கு பயிற்சி கொடுங்கள்.
- கைகளை வணக்கம் வைப்பது போல உயரத்தூக்குங்கள் அங்கிருந்து மடக்காமல் தொடைவரை கீழிறக்குங்கள், இடைப்பட்ட பகுதி முழுவதும் அந்நியர் தீண்டக்கூடாத பகுதி (பாலுறுப்புகள் மொத்தமும் இதற்குள் அடங்கும்) என்பதை சொல்லி தவறான தீண்டலை அடையாளம் காட்டுங்கள்.
- குழந்தைகளிடையே பால் அடிப்படியில் வேறுபாடு காட்டாதீர்கள், உதாரணத்துக்கு "அவுரு எல்லாம் நல்லாத்தான் படிக்கிறாரு, இவதான் சரியில்லை" இங்கே 'அவுரு' இளைய மகன், 'இவ' மூத்த மகள்.
- ஒரு பெண் பருவம் அடையும் போது நாம் அதை விழாவாக கொண்டாடவும் செய்கிறோம், அதே நேரத்தில் அசுத்தம் என்கிறோம். இது அவளுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. முறையாக அவளிடம் நிகழ்வதை விளக்குங்கள்
- அவர்கள் பருவம் அடையும் போது ஏற்படும் மாற்றங்கள், வியர்வை/உடல் நாற்றம் போன்றவை அவர்கள் மனதை பாதிக்காமல் பாத்துக்கொள்ளுங்கள், நாற்றம் நீக்கும் வாசனைத்திரவியங்கள் போன்றவற்றை உபயோகிக்க சொல்லிக் கொடுங்கள், எக்காரணம் கொண்டும் அருவருப்பு காட்டாதீர்கள்.
- இர.அருள் குமரன் -
நன்றி - உள்ளத்து ஓசை
Keine Kommentare:
Kommentar veröffentlichen