நான்: (ஒஸ்லோவில்)
நான்தான்....
விநாயகமூர்த்தி!
பெயருக்கேற்றாற் போல்தான்
கட்டைப் பிரமச்சாரி.
வயது நாற்பதைத் தொட்டாயிற்று
வழுக்கை விழுந்ததுதம் வசதிதான்
வெள்ளி முடிகள் வெளிப்படவில்லை.
ஒற்றை அறை வாழ்வு.
இண்டைக்கும் "ஓவர்ரைம்" தான்
பாரிய சலவைத் தொழிலகம்
முழங்காலும் மூட்டுக்களும் வலிக்கின்றது
இனிப் போய் சமைக்க முடியாது
நல்ல வேளை - குளிர்ப்பெட்டியில்
பலநாளாய் பாதுகாக்கப்பட்ட
பருப்புக்கறியும் கோழிக்கறியும்
பசியாற்றப் பயன்படும்.
அவர்கள்: (கொழும்பில்)
அம்மாவும்
அத்தானை இழந்த அக்காவும்
அவள் பிள்ளைகளும்
தங்கச்சிமார் இருவரும்
எல்லாரும் என்னை நம்பித்தான்
வசதியான வீடு
வாழ்வை மீறிய வசதிகள்
புதிய காலை ஒவ்வொன்றிலும்
புத்தம் புதிதாய்
மரக்கறிகளும் மாமிசமும்
முதல்நாள் மீதமானதை
மறுநாள் உண்ண முடியாதாம்
சமையலுக்கு மாத்திரமல்ல
சலவை செய்திடக்கூட
சம்பளத்திற்கு ஒருத்தி
வந்து வந்து போகின்றாள்
பிகு: நேற்றும்.....
நிமிடங்களைத் தின்னும்
தொலைபேசி அட்டையொன்றோடு சமர்
பகீரதப் பிரயத்தனமாய்
பலமுறை முயன்று
தொடர்பு கிடைத்தபோது
"அண்ணாமலை தொடர் பார்க்கிறம் ராசா
ஆறுதலாய் எடு....."
அவசரமாய்த் தொடர்பைத் துண்டித்தாள் அம்மா!
சோதியா - Norway
nantri - yarl.com
5 Kommentare:
நீங்கள் படித்த, ரசித்த அருமையான பதிவுகளை அறிமுகப்படுத்தும் உங்கள் சேவை தொடரட்டும். இந்த நானும் அவர்களும் கவிதையில் மனங்கவர்ந்து என்னுடைய பதிவிலிருந்து இந்தப்பக்கத்துக்கு சுட்டி கொடுத்துள்ளேன், அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று என்ற எண்ணத்தில். மீண்டும் நன்றி.
நன்னா இருந்துச்சு....ஆனாலும் பி.கு கொஞ்சம் அதிகப்படியோனு தோணிச்சு
வெளி நாடுகளில் முதுகொடியச் சம்பாதிக்கும் பணத்தை ஊரில் உற்றார் உறவினர் தாம் தூம் என்றுச் செலவு செய்வது எல்லா இடங்களுக்குமே பொருந்தும் போலும். அன்புடன்,
டோண்டு
அந்தக் கடைசிக்குறிப்பு ஒண்டும் ஓவராத் தெரியேல. சரியாத்தான் இருக்கு.
ஜெயபாலனின்ர செக்குமாடு சிறுகதை பாத்தனியளோ?
வன்னியன்
செக்குமாடு சிறுகதையை நான் வாசிக்கவில்லை.
ஆனால் ரா.சு குறிப்பிட்டது போல கடைசிவசனம் ஒன்றும் அதிகப்படியில்லை என்பது உண்மை.
ராகவன்
வெளிநாடுகளில் ஒவ்வொரு சென்ற்ஸ் ஆகக் கணக்குப் பார்த்து சம்பாதிக்கப் படும் பணம்
ஊரில் எப்படி வீசிச் செலவழிக்கப் படுகிறது என்று பார்த்தால் மனசு தாங்காது.
எத்தனை இளைஞர்கள் இந்த தான்தோன்றித் தனத்தில் வாழ்வைத் தொலைத்து வாடியிருக்கிறார்கள்
என்பதை நான் பார்த்திருக்கிறேன்.
இப்போதும் ஒருவர்...
இளைஞராக இருந்த போதே உழைத்து உழைத்து அனுப்பி தலையில் வழுக்கையும் வீழ்ந்த பிறகு திருமணம் செய்து இன்னும் ஊருக்குப் பணம் அனுப்பும் படலம் முடியாமல் அவர் குடும்பத்துள் பிரச்சனை. தங்கையின் கல்லயாணத்துக்கு 6இலட்சம் சீதனம் கொடுக்க வேண்டுமாம். பெற்றவர்களின் பொறுப்பற்ற தன்மையில் இவர் வாழ்வு பொசுங்கிப் போய் கிடக்கிறது. தலைக்கு மேல் கடன். வீட்டில் மனைவியோடு பிரச்சனை.... இதற்குள் கல்யாணச் செலவுக்கு மட்டும் இன்னும் இரண்டு இலட்சம் வேறாக வேண்டுமாம். முதல் தங்கையின் கல்யாணத்துக்காக தன் சொந்த வீட்டையே விற்று விட்டார். இப்போ விற்கப் படுவது அவரது சந்தோசம் நிம்மதி...மொத்தமாய் வாழ்வு.
Kommentar veröffentlichen