Sonntag, Oktober 17, 2004

மாற்ற விரும்பும் சம்பவம் - மூர்த்தி

தமிழ்ஓவியத்திலிருந்து

மாற்ற நினைத்தால் நிறைய இருக்கின்றன. பசி, பட்டினி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் உலகத்தையே புதிதாக மாற்றியமைக்கத்தான் வேண்டும். என்றாலும் இங்கு ஒன்றே ஒன்றைத்தான் கூற வேண்டுமென்பதால் இதோ:

இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. அப்போது எனக்கு மூன்று வயது. வருடம் 1974. தீபாவளி முடிந்த ஒரு சில நாள்தான் ஆகி இருக்கும். பலகாரம் தின்று கொண்டிருந்தேன். கடும் புயல் காற்று. மரங்கள் தரையைத் தொடுமளவுக்கு வளைந்து நிமிர்ந்தன. கடுமையான மழை. வெள்ளிக்கம்பியாய் மழைநீர் எம் கூரையைக் கிழித்துக் கொண்டு வீட்டிற்குள் இறங்கியது. தட்டு, அண்டா, குண்டா எல்லாம் எடுத்து வீட்டிற்குள் ஒழுகிய மழைநீரைத் தடுத்தார் அம்மா.

மின்னல் மின்ன இடி இடிக்க இன்னும் ஆக்ரோசமான மழை! பக்கத்தில் இருந்த மாமரம் வீட்டின் மீது விழ ஏற்கெனவே ஈரமாகியிருந்த சுவர் சரியத் தொடங்கியது. சரிந்ததைத் தாங்கிப்பிடிக்க அப்பா முயல அம்மாவும் உதவினார். அப்படியும் முடியாமல் அம்மா மேல் சுவர் சரிய அம்மா துள்ளி விலகினார். அப்பாவின் மோதிரம் சுவரோடு போய்விட்டது. கூரையும் சரிய எல்லோரும் வெளியே ஓடிவந்து தப்பித்தோம். புயல் விளையாடிக் களைத்தது.

அதன்பின் காலச்சக்கரம் உருண்டோடியது. 1979ம் வருடம். எனக்கு 8வயது. எனது 4 வயது தங்கை விளையாடிக் கொண்டிருந்தாள். அம்மா என் தம்பியை வயிற்றில் சுமந்து தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தார் மகபேற்றுக்காக! மீண்டும் அதே போன்ற இடி, மின்னல் பெருமழை! நானும் தங்கையும் அழத்தொடங்கினோம். அப்பாவும் பாட்டியும் ஆளுக்கொருவராய்க் கட்டியணைத்து ஆறுதல் சொன்னார்கள். கிருஷ்ணா கிருஷ்ணாவென பாட்டி இறைவனைத் துணைக்கு அழைத்தார். சிறிது நேரத்தில் இருவரும் தூங்கிப் போனோம். ஆனால் சற்று நேரத்தில் வந்த தந்தி அமைதியைக் கிழித்தது. தம்பியையும் அம்மாவையும் காப்பாற்ற முடியவில்லையாம். மாமா தந்தி கொடுத்திருந்தார். இம்முறை புயல் அம்மாவோடும் தம்பியோடும் கரையைக் கடந்தது.

என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை மாற்ற சந்தர்ப்பம் கிடைத்தால் நான் இறந்து அம்மாவையும் தம்பியையும் பிழைக்க வைப்பேன்.

மூர்த்தி

நன்றி-தமிழ்ஓவியம்

Samstag, Oktober 16, 2004

மாற்ற விரும்பும் சம்பவம் - ரா.சுப்புலட்சுமி

தமிழ்ஓவியத்திலிருந்து

ரொம்ப சின்ன வயசுல நடந்துச்சு இந்த சம்பவம். எங்க பக்கத்து வீட்டுல ஒரு அழகான அக்கா இருந்துச்சு. பேரு.......சாந்தினு வைச்சுக்குவோம். ஒரு நா அந்த அக்கா என்ன கூப்பிட்டு, " உன் ப்ரண்டு நளினி இருக்கா இல்ல..அவ அண்ணன் சேகர் கிட்ட நான் குடுத்தேன்னு இந்த கடுதாச குடுக்கிறயா...உனக்கு ஆரஞ்சு மிட்டாய் கை நிறைய தர்றேன்"னு சொல்லிச்சு. எனக்கு ஆரஞ்சு மிட்டாய்னா அவ்ளோ உசுரு. நான் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு கடுதாசு வாங்கின்னு ஒரே ஒட்டமா ஒடினேன்.

அப்பதான் நளினி வந்தா, "என்ன இவ்ளோ ஒட்டமா ஒடியாரே..என்ன உன் கையிலே"ன்னு கேட்டா. நான் "உன் அண்ணனுக்கு தான்...கடுதாசு..அந்த சாந்தி அக்கா குடுக்க சொல்லிச்சு..". அதுக்கு அவ, " நேத்துதான் என்கிட்ட ஒண்ணு தந்துச்சு அந்த அக்கா..அதுக்குள்ள இன்னுஓண்ணா..?". நாங்க பேசிகிட்டே இருக்கும்போது, அவ அம்மா வந்துட்டாங்க. " என்ன..கடுதாசுனு என்னமோ பேசிகிட்டு இருக்கே....என்னது அது...?" என் கையில் உள்ளதைப் பார்த்து கேட்டாங்க.

நானும் தெரியாத்தனமா, "சேகர் அண்ணனுக்குத்தான் அத்த, அந்த எருமட்டைகாரங்க வீட்டு சாந்தி அக்கா குடுக்கச் சொன்னங்க"னு சொல்லிட்டு அவங்க கிட்ட குடுத்தேன். வாங்கி படிச்சு பாத்துட்டு, " என்ன திமிருடி அவளுக்கு...? என்ன தெர்யமிருந்தா என் புள்ளைக்கே கடுதாசு குடுத்து மயக்குவா அவ ?...இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பார்க்கமா விட மாட்டேன்"னு வரிஞ்சு கிட்டு போனங்க.

O

சில வருடங்களுக்கு முன் சாந்தி அக்காளைப் பார்த்தேன். உடம்பெல்லாம் சுருங்கி தலையெல்லாம் நரைத்து அடையாளம் தெரியாமல் போயிருந்தாள். என்னை அடையாளம் தெரியவில்லை அவளுக்கு, நான் சொல்லி புரிய வைத்தவுடன், முகம் மலர சினேகத்துடன் சிரித்தாள்.

சேகருடனான அவளுடைய முதல் காதல் அன்று முறிந்தது. அவர் அம்மா போட்ட சண்டையால் அவமானம் தாங்க முடியாமல் அவர்கள் வீட்டை காலிச் செய்து வேறு ஊருக்கு போனார்கள். அவள் அப்பா உடனேயே சொந்தத்திலேயே ஒரு மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் முடித்து வைத்தார்.

"அது சரிப்பட்டு வரல்லே. அவருக்கு என்னை சுத்தமா புடிக்கல. ரெண்டாவது வருசமே என்னை விட்டு போய்ட்டார். நான் எருமட்டை வித்து, பஜ்ஜிப் போட்டு எங்க அப்பா அம்மா கூடவே காலத்தே ஓட்டிட்டேன்."

"சேகர் அண்ணன் எப்படியிருக்கார்...?"

"ஓ.....உனக்கு அப்ப விசயமே தெரியாதா....? எனக்கு கல்யாணம் முடிஞ்ச மறு நா, அவங்க வீட்டு உத்தரத்தில தொங்கிட்டு மவராசனா போய் சேர்ந்துட்டார்..... நாந்தான் பூமிக்கு பாரமா இன்னும் இருக்கேன்..."

பீறிட்டு வந்த கண்ணீரை அடக்க முடியவில்லை என்னால்.

நான் மட்டும் அன்று அந்த கடிதத்தை சேகர் அண்ணனிடமே கொடுத்து இருந்தால்...?

ரா.சுப்புலட்சுமி
நன்றி-தமிழ்ஓவியம்