Sonntag, Oktober 17, 2004

மாற்ற விரும்பும் சம்பவம் - மூர்த்தி

தமிழ்ஓவியத்திலிருந்து

மாற்ற நினைத்தால் நிறைய இருக்கின்றன. பசி, பட்டினி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் உலகத்தையே புதிதாக மாற்றியமைக்கத்தான் வேண்டும். என்றாலும் இங்கு ஒன்றே ஒன்றைத்தான் கூற வேண்டுமென்பதால் இதோ:

இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. அப்போது எனக்கு மூன்று வயது. வருடம் 1974. தீபாவளி முடிந்த ஒரு சில நாள்தான் ஆகி இருக்கும். பலகாரம் தின்று கொண்டிருந்தேன். கடும் புயல் காற்று. மரங்கள் தரையைத் தொடுமளவுக்கு வளைந்து நிமிர்ந்தன. கடுமையான மழை. வெள்ளிக்கம்பியாய் மழைநீர் எம் கூரையைக் கிழித்துக் கொண்டு வீட்டிற்குள் இறங்கியது. தட்டு, அண்டா, குண்டா எல்லாம் எடுத்து வீட்டிற்குள் ஒழுகிய மழைநீரைத் தடுத்தார் அம்மா.

மின்னல் மின்ன இடி இடிக்க இன்னும் ஆக்ரோசமான மழை! பக்கத்தில் இருந்த மாமரம் வீட்டின் மீது விழ ஏற்கெனவே ஈரமாகியிருந்த சுவர் சரியத் தொடங்கியது. சரிந்ததைத் தாங்கிப்பிடிக்க அப்பா முயல அம்மாவும் உதவினார். அப்படியும் முடியாமல் அம்மா மேல் சுவர் சரிய அம்மா துள்ளி விலகினார். அப்பாவின் மோதிரம் சுவரோடு போய்விட்டது. கூரையும் சரிய எல்லோரும் வெளியே ஓடிவந்து தப்பித்தோம். புயல் விளையாடிக் களைத்தது.

அதன்பின் காலச்சக்கரம் உருண்டோடியது. 1979ம் வருடம். எனக்கு 8வயது. எனது 4 வயது தங்கை விளையாடிக் கொண்டிருந்தாள். அம்மா என் தம்பியை வயிற்றில் சுமந்து தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தார் மகபேற்றுக்காக! மீண்டும் அதே போன்ற இடி, மின்னல் பெருமழை! நானும் தங்கையும் அழத்தொடங்கினோம். அப்பாவும் பாட்டியும் ஆளுக்கொருவராய்க் கட்டியணைத்து ஆறுதல் சொன்னார்கள். கிருஷ்ணா கிருஷ்ணாவென பாட்டி இறைவனைத் துணைக்கு அழைத்தார். சிறிது நேரத்தில் இருவரும் தூங்கிப் போனோம். ஆனால் சற்று நேரத்தில் வந்த தந்தி அமைதியைக் கிழித்தது. தம்பியையும் அம்மாவையும் காப்பாற்ற முடியவில்லையாம். மாமா தந்தி கொடுத்திருந்தார். இம்முறை புயல் அம்மாவோடும் தம்பியோடும் கரையைக் கடந்தது.

என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை மாற்ற சந்தர்ப்பம் கிடைத்தால் நான் இறந்து அம்மாவையும் தம்பியையும் பிழைக்க வைப்பேன்.

மூர்த்தி

நன்றி-தமிழ்ஓவியம்

Keine Kommentare: